

உன்னாவோ பாலியல் வழக்கு காரணமாக பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ செங்காரை எம்.பி. சாக்ஷி மகராஜ் உள்ளிட்டு 10ஆயிரம் பார்வையாளர்கள் இதுவரை சிறையில் சென்று சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச எம்எல்ஏவால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண் சென்ற வாகனம் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகியிருப்பது தற்செயல் அல்ல திட்டமிட்ட சதி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்த பின்னர் செங்கார் எம்எல்ஏவை கட்சியிலிருந்து பாஜக நீக்கியது. அதன்பிறகு உன்னாவோ பாலியல்
வழக்கு தீவிரமடைந்துள்ளது.
உன்னாவோ பாலியல் வழக்கில் சிக்கி கைதான சிங்கார் தேர்தலுக்குப் பிறகு உபியில் உள்ள சீதாப்பூர் சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு அவரை சந்திக்க பார்வையாளர்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருந்தனர் என்றும் அதற்கான பதிவுகளை சரியாக பராமரிக்கப்படவில்லை எனவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் சிங்காரை சந்திக்க 20 லிருந்து 25 பேர் சிறைக்கு வருகை தருகிறார்கள். அவர்களில் சிலர் எம்.எல்.ஏ.வை நேரடியாக சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்களின் பெயர்கள் மட்டும் சிறைச்சாலை பதிவுகளில் பதிவு செய்யப்படுவதாக சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறை அதிகாரிகள் தற்போது கடும் குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர், காரணம், பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ செங்காரை சந்திக்கவரும் பார்வையாளர்கள் யார் யார் என்ற விவரம் அனைத்துப் பதிவுகளையும் சிபிஐ கேட்டுத் துளைத்தெடுக்கத் தொடங்கியுள்ளது.
பார்வையாளர்கள் வருகை குறித்து தொடர்புகொண்டபோது சிறை அதிகாரி ஒருவர் அதனை ஒப்புக்கொண்டார்.
"எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் கூட அவரை தவறாமல் பார்ப்பார்கள். அவர்களில் யாரும் செங்காரை சந்திப்பதைத் தடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. தவிர, அவரது தொகுதியைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்துசந்தித்தனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட அவரை சந்திக்க நிறைய கூட்டம் இருந்தது" என்று சீதாப்பூர் சிறை அதிகாரி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சீதாபூர் சிறையில் உள்ள குல்தீப் சிங் செங்கரைப் பார்வையிட்டவர்களில் பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜும் ஒருவர்.