Published : 05 Aug 2019 12:15 PM
Last Updated : 05 Aug 2019 12:15 PM

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு; என்ன சொல்கிறது?

படம்: ட்விட்டர்: கோப்பு படம்

மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு அதிகாரங்களை காஷ்மீருக்கு வழங்கும் இந்த சட்டப்பிரிவு மிகவும் முக்கியமானதாக அம்மாநில அரசியல்வாதிகளால் பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் 370-வது பிரிவில் என்ன சொல்கிறது?

அரசியல் சட்டப்பிரிவு 370-ல் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* வெளியுறவு, தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை தவிர பிற துறை சார்ந்த நடவடிக்கைகள் மீது மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

* சட்டவிதி எண் 370-ன் படி மாநிலத்தின் எல்லையைக் கூட்டவோ குறைக்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. 

* அவ்வாறு செய்தால் அதனை காஷ்மீர் மாநில சட்டப்பேரவையுடன் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும். 

* மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது. அவ்வாறு செய்வதற்கும் காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் மட்டுமே குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்ற திருத்தம் பின்னர் சேர்க்கப்பட்டது. 

* ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது. ஆனால் இவர்கள் பிற மாநிலங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

35ஏ என்ன சொல்கிறது?

அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும்,  ஜம்மு- காஷ்மீருக்கு தலைமை வகித்த ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் 1954 ஆம் ஆண்டு சட்டபிரிவு 35 ஏ-வை உருவாக்கி ஆணை பிறப்பித்தார். இது அரசியல் சட்டப்பிரிவு 370-ன் இணைப்பாக பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சட்டப்பிரிவு 35ஏ ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது. 

* இந்தச் சட்டப்பிரிவு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதை நிர்ணயம் செய்கிறது.

* நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிறப்பு உரிமைகள் உள்ளன. 

* அரசுப் பணி பெறும் உரிமை, நிலம், வீடு போன்ற சொத்து வாங்கும் உரிமை, அரசு ஊக்கத்தொகை மற்றும் பிற சலுகைகளைப் பெறும் உரிமைகளை அளிக்கிறது. 

* இது நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

* வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது. ஆனால் அவர்கள் வெளி மாநிலங்களில் சொத்துகளை வாங்க முடியும்.

* அதுபோல மற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது. 

* ஜம்மு- காஷ்மீரில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாது.

* இதுபோன்ற பெண்கள் சொத்திலும் உரிமை கொண்டாட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x