Published : 05 Aug 2019 11:42 AM
Last Updated : 05 Aug 2019 11:42 AM

காஷ்மீர் இரண்டாகப் பிரிப்பு; யூனியன் பிரதேசங்களாக அறிவிப்பு: அமித் ஷா

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். 2 யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என அவர் கூறினார். 

காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அசாதாரண சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளன. இதையடுத்து இன்று காலை பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. 

அதேசமயம் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜம்மு - காஷ்மீர் தொடர்பான மசோதாக்களை தாக்கல் செய்து பேச முயன்றார். குலாம் நபி ஆசாத் இடைமறித்துப் பேசுகிறார். அப்போது, காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுகிறது. போர் நடைபெறும் சூழலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ எனக் கூறினார். அப்போது அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அமித் ஷா பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35 ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்வது என மத்திய அமைச்சவை முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது’’ என அறிவித்தார். கடும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே இந்த அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என அமித் ஷா அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும் எனவும் அவர் அறிவித்தார். அதேசமயம் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகச் செயல்படும் எனவும் அவர் கூறினார். இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. 


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x