Published : 05 Aug 2019 11:08 AM
Last Updated : 05 Aug 2019 11:08 AM

துபாய் லாட்டரியில் ரூ.28 கோடி வென்ற ஹைதராபாத் விவசாயி

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு துபாய் லாட்டரியில் ரூ.28 கோடி பரிசு விழுந்திருக்கிறது.

நிசாமாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரிக்காலா விலாஸ். தெலுங்கானாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டத்தைத் தொடர்ந்து பிழைப்புக்காக அவர் ஐக்கிய அரபு எமீரகம் (யுஏஇ) சென்றார். அங்கு கட்டுமானப் பணியாளராகவும், பின்னர் சிறிது காலம் கார் ஓட்டுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

விசா முடிந்துவிட்டதால் அவர் தாயகம் திரும்ப ஆயத்தமானார் அப்போது அவருக்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு துபாய் லாட்டரியில் பல கோடி ரூபாய் பணம் பரிசாகக் கிடைத்த செய்தி நினைவுக்கு வந்துள்ளது. உடனே ரிக்காலாவும் அபுதாபி ரஃபேல் என்ற பிரபல லாட்டரி நிறுவனத்திடமிருந்து ஒரு லாட்டரியை வாங்கியுள்ளார்.  

இந்திய மதிப்பில் 20,000 ரூபாய்க்கு அந்த லாட்டரி சீட்டை அவர் வாங்கியுள்ளார். லாட்டரியின் எண் 222805. ஆனால், லாட்டரியின் குலுக்கல் நடைபெறுவதற்கு முன்னதாகவே அவர் இந்தியா திரும்ப நேரிட்டது. இந்நிலையில் இந்தியா திரும்பிய அவருக்கு இன்ப அதிர்ச்சியாக வந்துள்ளது லாட்டரி பரிசு செய்தி.

ஆம், ரிக்காலா விலாஸ் அங்கிருந்து கிளம்பிய பின்னர் துபாயில் அந்த லாட்டரி நிறுவனம் குலுக்கல் நடத்தியிருக்கிறது. இதில், ரிக்காலா விலாஸ் வாங்கிய லாட்டரி பரிசுக்குத் தேர்வானது. இந்திய ரூபாய் மதிப்பில் அவருக்கு ரூ.28 கோடி கிடைக்கும் என லாட்டரி நிறுவனம் கூறியிருக்கிறது. இந்தத் தகவலை ஆகஸ்ட் 3-ம் தேதி ரிக்காலாவுக்கு சம்பந்தப்பட்ட லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிக்காலா, "இந்தத் தகவல் எனக்குக் கிடைத்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் என் அம்மாவிடம் சென்று சொன்னேன். அவரும் நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். எனது இலக்கு பணம் சம்பாதித்து எனது இரு மகள்களையும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்பதே. இனி நான் துபாய்க்கு வேலைக்கு செல்ல மாட்டேன். பரிசுத் தொகையை வாங்குவதற்காக மட்டும் அங்கு செல்லவுள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x