Published : 05 Aug 2019 10:42 AM
Last Updated : 05 Aug 2019 10:42 AM

இந்திய அரசியலமைப்பின் 35ஏ, 370 சட்டப்பிரிவுகள் தேச விரோதமானவை: காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ராய்னா கருத்து

இந்திய அரசியலமைப்பின் 35ஏ மற்றும் 370 சட்டப்பிரிவுகள் தேச விரோதமானவை என  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாஜக தலைவரான ரவீந்தர் ராய்னா கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பின் 35ஏ பிரிவு மற்றும் 370-வது பிரிவை ரத்து செய்ய பாஜக அரசு உறுதியாக உள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக ரவீந்தர் ராய்னா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு இன்று (திங்கள்கிழமை) அளித்த பேட்டியில், "இந்திய அரசியலமைப்பின் 35ஏ, 370 ஆகிய சட்டப்பிரிவுகள்  தேச விரோதமானவை. சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் இவை காஷ்மீரில் வெறுப்புச் சுவரையே உருவாக்கியுள்ளன. 

35ஏ சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீர் பெண்கள் மீது பாகுபாட்டைத் திணித்துள்ளது. மாநிலத்தில் தீவிரவாதம் பிறக்க வழிவகை செய்ததும் சட்டப்பிரிவு 370தான். மாநிலத்தில் பிரிவினைவாதிகளை உருவாக்கியதும் இந்தச் சட்டமே.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பின் 35ஏ பிரிவு மற்றும் 370-வது பிரிவை ரத்து செய்வது என்ற நிலைப்பாட்டில் பாஜக உறுதியாக உள்ளது" என்றார்.

படை குவிப்பும்.. காஷ்மீர் பதற்றமும்..
கடந்த வாரம் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் பாகிஸ்தான் நாட்டின் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது முதல் அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. அமர்நாத் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடுதலாக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் அச்சம்கொள்ள வேண்டாமென்று அரசாங்கம் கூறியிருந்தாலும்கூட மாநிலத்தின் பதற்றமான சூழலே நிலவுகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீர் தொடர்பாக இதில் முக்கிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான் காஷ்மீர் பாஜக தலைவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகளை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். 

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து பேசிய ராய்னா, "காஷ்மீரின் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றனர். பிரதமர் மோடி காஷ்மீருக்கு நிதியுதவிகளை அறிவித்துள்ளார். அங்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். உணவு, தண்ணீர், நலத்திட்டங்கள் என எல்லாம் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.

அனைத்தையும் பெற்றுக்கொண்டு காஷ்மீரிகள் பாகிஸ்தானைத் துதி பாடுகின்றனர். ஜம்மு காஷ்மீரின் இந்த மோசமான நிலைக்கு அங்குள்ள அரசியல்வாதிகளே காரணம். அதனால்தான் மத்திய அரசு இத்தகைய கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் ஒருபோது தேசியவாதத்தை ஆதரித்ததில்லை. தீவிரவாதிகளையே ஆதரிக்கிறது. அதனாலேயே இந்த முடிவை அரசு எடுக்கிறது.

எப்போதெல்லாம் இந்த தேசம் நெருக்கடியான சூழலை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் காஷ்மீர் அரசியல்வாதிகள் அமைதியாக இருந்துவிடுகின்றனர். காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, பிடிபி என எல்லாக் கட்சிகளும் மவுனியாகிவிடுகின்றன. புல்வாமாவில் நம் வீரர்கள் கொல்லப்பட்டபோது இவர்கள் மவுனமாகவே இருந்தனர். அதற்கு இந்தியா பாலகோட்டில் பதிலடி கொடுத்தபோது அவர்கள் அரசாங்கத்தைக் கேள்விக்குள்ளாக்கினர்.

பிரதமர் எடுக்கும் முடிவு எப்போதுமே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்மை சேர்ப்பதாகவே இருக்கும். ஜம்மு காஷ்மீர் மக்களும் பிரதமர் மோடியின் பக்கம்தான் நிற்கிறார்கள். அரசியல் தலைவர்கள் சிலருக்குத்தான் இந்த விவகாரத்தில் வலியும் வேதனையும் ஏற்படுகிறது. காங்கிரஸும், தேசிய மாநாட்டுக் கட்சியும், பிடிபி-யும் எப்போதுமே தேச விரோத சக்திகளுக்கு பின்பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றன" என்றார்.

முன்னதாக, நேற்று பின்னிரவில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஓமர் அப்துல்லா மற்றும் பிடிபி (மக்கள் ஜனநாயகக் கட்சி) தலைவர் மெஹபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதேபோல் காங்கிரஸ் தலைவர் உஸ்மான் மஜீத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் எம்.ஒய்.தாரிகாமி ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x