Published : 05 Aug 2019 10:20 AM
Last Updated : 05 Aug 2019 10:20 AM

காஷ்மீர் நிலவரம்; நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம்: பாஜக எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

புதுடெல்லி

காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டிஸ் வழங்கியுள்ளன. இதனிடையே பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் அவையில் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒருவாரமாகவே ஏராளமான பாதுகாப்புப் படையினரை மத்திய அரசு குவித்து வருகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இருந்து வரும் சூழலில் அங்கு தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அமர்நாத் யாத்திரையில் இருந்த பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு கீழே இறங்க உத்தரவிடப்பட்டனர்.

ஸ்ரீநகரில் இருக்கும் தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் வெளிமாநில மாணவர்களையும் உடனடியாக வெளியேறக் கூறியும், மறுஉத்தரவு வரும் வரை யாரும் வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ பிரிவை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, இண்டெர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அசாதாரண சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. 
இந்தநிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆதிரஞ்சன் சவுத்திரி, மணீஷ் திவாரி உள்ளிட்டோர் இந்த தீ்ர்மானத்தை அளித்துள்ளனர். அதுபோலவே ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸியும் ஒத்திவைப்பு தீ்ர்மானம் அளித்துள்ளார். 

இதனிடையே நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூடி இன்று காலை ஆலோசனை நடத்தினர். இதுபோலவே பாஜக எம்.பி.க்கள் அனைவரும் இன்று கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x