

பாட்னா
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடப் போவதாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) அறிவித்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஐக்கிய ஜனதா தளத்துக்கு மத்திய அமைச் சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒருவருக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்க பாஜக முன்வந்தது. அதை ஐக்கிய ஜனதா தளம் ஏற்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக, பாஜக மீது ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், பிஹார் முதல்வரு மான நிதீஷ் குமார் அதிருப்தி யில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிஹாரின் அண்டை மாநிலமான ஜார்க் கண்டில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டி யிடும் என பெரிதும் எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், இதனை ஐக்கிய ஜனதா தளம் திட்ட வட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ஜார்க்கண்ட மாநிலத் தலைவர் சல்கான் முர்மு கூறுகையில், "இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தனித்தே போட்டியிடும். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடாது. ஜார்க்கண்டில் எங்கள் கட்சிக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. எனவே, மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியமில்லை'' என்று தெரிவித்தார். - பிடிஐ