

புதுடெல்லி, பிடிஐ
ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படாமல் இருப்பதால், வாகன விற்பனை மந்தமாகி கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆட்டோமொபைல் டீலர்ஷிப்பில் 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று மோட்டார் வாகன முகவர்கள் கூட்டமைப்பான எப்ஏடிஏ (Federation of Automobile Dealers Associations (FADA) ) அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை உடனடியாக சரிவிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால், வரும் மாதங்களில் இன்னும் அதிகமான வேலையிழப்புகள் உருவாகலாம். ஆதலால் உடனடியாக ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியைக் குறைத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஃஎப்ஏடிஏ அமைப்பின் தலைவர் ஆஷிஸ் ஹர்ஸ்ராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''நாடு முழுவதும் கடந்த மே மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையிலான 3 மாதங்களில் ஏராளமான வேலையிழப்புகள் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ளன.
வாகன விற்பனையில் ஏற்பட்ட மந்தமான சூழல், விற்பனைக் குறைவு போன்றவற்றால் வாகன உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில்நுட்பப் பிரிவில் இருப்போர், வாகனங்களைப் பராமரிக்கும் பணியில் இருப்போர் அதிகமான வேலையிழப்பைச் சந்திக்கிறார்கள். கடந்த 2 மாதங்களில் எங்கள் கணிப்பின்படி வாகன முகவர்கள் மூலம் 2 லட்சம் பேர் அதாவது 7 முதல் 8 சதவீதம் பேர் வேலையிழந்துள்ளனர்.
ஆட்டோமொபைல் துறையில் நேரடியாக 25 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இதில் 26 ஆயிரம் ஆட்டமொபைல் ஷோரூம்கள், 15 ஆயிரம் டீலர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் 25 லட்சம் பேர் மறைமுகமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில் கடந்த 18 மாதங்களில் மட்டும் 286 ஆட்டோமொபைல் ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன. 32 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். இருப்பினும் கடந்த 3 மாதங்களில் மட்டும்தான் ஏராளமான டீலர்கள் தங்கள் ஷோரூம்களை மூடியுள்ளனர்.
இந்த வேலையிழப்புக்கு முக்கியக் காரணமே ஆட்டமொபைல் துறையில் ஏற்பட்ட விற்பனைக் குறைவு, விற்பனையில் ஏற்பட்ட மந்தம்தான். கடந்த சில ஆண்டுகளாகவே உற்பத்திச் செலவு, பராமரிப்புச் செலவு ஆகியவை இரு மடங்காக உயர்ந்துவிட்டது. ஆதலால், வேறு வழியின்றி ஆட்களைக் குறைத்து வருகிறார்கள்.
தேர்தலுக்குப் பின் முதல் காலாண்டில் ஏதேனும் மாற்றம் நிகழும் என்று டீலர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், வாகன விற்பனைத் துறையில் மந்தநிலை தொடர்ந்ததால், வேறு வழியின்றி ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறை மிகவும் வித்தியாசமான துறை. இதில் அனுபவம் இல்லாமல் பணியாற்ற முடியாது. தொழிலாளர்களுக்கு ஏராளமான முதலீட்டில் பயிற்சி அளித்துள்ளனர். இப்போது, அவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும்போது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல டீலர்களுக்கும் அது இழப்புதான்''.
இவ்வாறு ஹர்ஸ்ராஜ் தெரிவி்த்தார்.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் -ஜூன் மாதங்களில் அனைத்துவகை வாகன விற்பனை 69 லட்சத்து 42 ஆயிரத்து 742 ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 12.35 சதவீதம் விற்பனை குறைந்து, 60 லட்சத்து 85 ஆயிரத்து 406 ஆகக் குறைந்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் 54 லட்சத்து 42 ஆயிரத்து 317 வாகனங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 சதவீதம் விற்பனை குறைவாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனை 51 லட்சத்து 16 ஆயிரத்து 718 ஆக இருந்தது.
பயணிகள் பயன்படுத்தும் வாகனங்கள் விற்பனையும் கடந்த ஒரு ஆண்டாகக் குறைந்துள்ளது. மாருதி சுஸூகிநிறுவனம் கடந்த ஜூலை மாத விற்பனையில் 36 சதவீத சரிவும், ஹூன்டாய் நிறுவனம் 10 சதவீதம் சரிவும் சந்தித்துள்ளன. மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனம் 16 சதவீத விற்பனைக் குறைவையும், டாடா மோட்டார்ஸ் பயணிகள் பயன்படுத்தும் கார்கள் விற்பனை 31 சதவீதமும், ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 48 சதவீதமும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.