Published : 04 Aug 2019 02:00 PM
Last Updated : 04 Aug 2019 02:00 PM

2-வது நாளாக மழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை; முடங்கிய மக்கள்: கேரளாவுக்கும் அடுத்து மழை எச்சரிக்கை

சாலையில் தேங்கியுள்ள நீரில் நடந்துச செல்லும் மக்கள் : படம் ஏஎன்ஐ

மும்பை,

மும்பையில் தொடர்ந்து 2-வது நாளாக பெய்துவரும் கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி வீட்டுக்குள்ளே இருக்கின்றனர்.

தொடர் மழை காரணமாக ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, பஸ் போக்குவரத்து முடங்கியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வடமாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த வாரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளை மூழ்கடித்த மழை, நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் கொட்டத் தொடங்கியுள்ளது. . 

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இருந்து பெய்துவரும் மழை இன்று காலையும் தொடர்ந்தது. இன்னும் அடுத்த 24 மணிநேரத்துக்கு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளான தானே, பால்கர், நவி மும்பை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மும்பையின் புறநகர் பகுதிகளில் 100 மிமீ மழையும், தானே, நவி மும்பை பகுதிகளில் 250 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு அலுவல்களுக்காகவும், பொருட்கள் வாங்கவும், பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லும் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். 

சாலைகள், சுரங்கப்பாதைகள், தெருக்கள், தாழ்வான குடியுருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் எங்கும் வெளியே செல்லமுடியாமல் தவிக்கின்றனர். 

ரயில் இருப்புப்பாதைகளில் மழை தேங்கி இருப்பதால், மும்பை கல்யான் ரயில் நிலையம், சிஎஸ்டி ரயில் நிலையம், கார்ஜாத், காசராந்த் கோபலி ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், புனேயில் இருந்து மும்பை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

புறநகர் ரயில்கள் தவிர, நீண்ட தொலைவு செல்லும் துரந்தோ, கோனார்க் எக்ஸ்பிரஸ், அமிர்தசர் எக்ஸ்பிரஸ், தேவ்கிரி எக்ஸ்பிரஸ், ஆகிய ரயில்கள் நாசிக், ஆட்கான், கல்யான், சிஎஸ்டி ஆகிய ரயில் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

விமான நிலைய ஓடுபாதையிலும் மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்து இரு விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படவில்லை, மேலும், 6-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டு திருப்பிவிடப்பட்டன.


இதற்கிடையே  பால்கர் மாவட்டத்தில் உள்ள விகாரம்காத் தாலுகாவில் வெள்ளநீரில் சிக்கிய 16 வயது சிறுவன் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்திய வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கையில், " இன்றைய நாள் முழுவதும் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை, காற்றுடன் பெய்ய வாய்ப்புள்ளது. கடற்கரைப்பகுதியில் 5 மீட்டர் உயரத்துக்கும் அதிகமாக அலை உருவாகலாம் என்பதால், மக்கள் கடற்கரைப் பகுதிக்குள் செல்ல வேண்டாம். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது

கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட்

இதற்கிடையே கேரள மாநிலத்திலும் வரும் 6-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 7-ம் தேதி முதல் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் 6-ம் தேதி கனமழை பெய்யும் என்றும், இடுக்கி, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 7-ம் தேதி கனமழை  பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x