உன்னாவ் வழக்கு: பாஜக எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட பலரின் வீடுகளில் 12 இடங்களில் சிபிஐ திடீர் ரெய்டு
லக்னோ,
உன்னாவ் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் உள்ளிட்ட பலரின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
4 மாவட்டங்களில் உள்ள 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டு, உன்னாவ் நகரில் ஒரு சிறுமியை பங்கார்மாவு தொகுதி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்தப் பெண், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வாகன விபத்தில் சிக்கினார். இந்த விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய குல்தீப் செங்கார் திட்டமிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இந்த சூழலில் உன்னாவ் பலாத்கார வழக்கு, விபத்து வழக்கு என 5 வழக்குகளையும் சிபிஐ வசம் உ.பி. அரசு ஒப்படைத்தது. இந்த வழக்கில் எம்எல்ஏ செங்கார் உள்பட 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உன்னாவ் வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து குல்தீப் சிங் செங்கார் நீக்கப்பட்டார்.
பலாத்கார வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லிக்கு மாற்றியது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை கருதி தற்காலிகமாக உத்தரவை ஒத்திவைத்தது. மேலும், விபத்து வழக்கை 7 நாட்களில் சிபிஐ விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், சிபிஐ அதிகாரிகள் விசாரணையை முடுக்கியுள்ளார்கள். செங்காரின் துப்பாக்கி லைசன்ஸும் முடக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் எம்எல்ஏ குல்தீப் செங்கார் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சிபிஐ அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், " உன்னாவ் பலாத்கார வழக்கு தொடர்பாக லக்னோ, உன்னாவ், பன்டா, பதேபூர் உள்ளிட்ட 17 இடங்களில், 4 மாவட்டங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சிபிஐ குழு நேற்று சீதாபூர் சிறைக்குச் சென்று செங்காரிடம் விசாரணை நடத்தியது. சிறையில் நாள்தோறும் செங்கார் யாரைச் சந்திக்கிறார், யாருடன் பேசுகிறார் எனும் விவரங்களையும் சிபிஐ அதிகாரிகள் சேகரித்து இருக்கிறார்கள். சிபிஐ சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது'' என்றார்.
- ஐஏஎன்எஸ்
