

ஸ்ரீநகர்
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 5 பேர், காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ள தாக புலனாய்வு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில், பாதுகாப்புப் படையினர் நேற்று அதிகாலை திடீர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு உடனடியாக ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதேபோல், தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் பண்டுஷான் பகுதியில் நேற்று காலை பாது காப்புப் படையினர் வீடு வீடாக சோதனை நடத்தினர். அங்கு மறைந்திருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுன்ட்டரில் பலியான தீவிர வாதி ஒருவரின் பெயர் மன்சூர் பட் என்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக் கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஜீனத் உல் இஸ்லாம் நைகூ என்பவர் சுட்டுக் கொல்லப் பட்டார். சோபியான் போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது, தன்வீர் அகமது என்பவரை கடத்திக் கொன்றது உட்பட பல்வேறு வழக்குகள் ஜீனத் மீது உள்ளன. - பிடிஐ