Published : 03 Aug 2019 08:10 PM
Last Updated : 03 Aug 2019 08:10 PM

அரசியலில் தொடர இனியும் விரும்பவில்லை;  நிம்மதியாக என்னை வாழ விடுங்கள்: குமாரசாமி 

பெங்களூரு

அரசியலில் தொடர இனியும் விரும்பவில்லை.  பொதுமக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் 14 மாதங்கள் ஆட்சி செய்த காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்த அந்தக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி நடந்த  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.  

பெரும்பான்மை எம்எல்ஏக்கள் கொண்ட எடியூரப்பா ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார்.   பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, முதல்வர் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில் அரசியலில் தொடர இனியும் விரும்பவில்லை என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பெங்களூருவில் இன்று குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்தவன் நான். நான் முதல்வர் ஆனதும் எதிர்பாராததுதான். இரண்டு முறை முதல்வர் ஆவதற்கு கடவுள் எனக்கு வாய்ப்பு வழங்கினார்.

யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கர்நாடக மாநில வளர்ச்சிக்காக 14 மாதங்கள் நன்றாக வேலை செய்தேன். அதில் நான் திருப்தியை உணர்கிறேன். 

இப்போதைய அரசியலை நான் உற்று கவனித்து வருகிறேன். சாதி மோகம் பற்றிய அரசியல் நல்லவர்களுக்கு தேவையில்லை. இது மக்களுக்கானது அல்ல. இதில் என் குடும்பத்தைக் கொண்டுவர மாட்டேன். இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை. நிம்மதியாக என்னை வாழ விடுங்கள். மக்கள் மனதில் எனக்கு இடம் கிடைத்தால் போதும்'' என்றார் குமாரசாமி. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x