Published : 03 Aug 2019 07:06 PM
Last Updated : 03 Aug 2019 07:06 PM

ஈரானில் 18 இந்தியர்களும் நலமாக உள்ளனர்; விரைவில் விடுவிக்கப்படுவர்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் விரைவில் விடுவித்து தாயகம் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

நடந்தது என்ன? 

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரணமாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆத்திரமடைந்த ஈரான் நாட்டு வீரர்கள், வளைகுடா கடல் பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடியாக ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்க ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜூலை 4-ம் தேதி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் நாட்டு கப்பலை கிப்ரால்டார் என்ற இடத் தில் இங்கிலாந்து அரசு சிறைப் பிடித்தது.

இந்தக் கப்பலில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பலில் சிக்கியுள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பொறியாளர் நவீன்குமாரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே, கடந்த 19-ம் தேதி இங்கிலாந்து நாட்டு கொடியுடன் சவுதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்த ஸ்வீடன் நாட்டின் ‘ஸ்டெனா இம்பெரோ' என்ற எண்ணெய்க் கப்பலை ஈரான் அரசு சிறைப்பிடித்தது. இந்தக் கப்பலில் உள்ள 23 பேரில் 18 பேர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதர ஊழியர்கள் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், லாட்வியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆதித்யா வாசுதேவன் (27) சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர். மகனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அவரது பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். 

முதல்வர் பழனிசாமி  18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் ஈரான் பிடித்து வைத்துள்ள ஸ்டெனோ இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் விரைவில் விடுவித்து தாயகம் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றோம். இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றோம். தெஹ்ரானில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் மாலுமிகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் நலமாக இருப்பதாகத் தெரிகிறது'' என்று அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x