Published : 03 Aug 2019 05:47 PM
Last Updated : 03 Aug 2019 05:47 PM

காஷ்மீரில் விமான கட்டணம் திடீர் உயர்வு: பாதுகாப்பு எச்சரிக்கை எதிரொலி

ஸ்ரீநகர்

காஷ்மீரில் வீரர்கள் குவிக்கப்பட்டு அமர்நாத் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு வரும் சூழலில் ஸ்ரீநகர் வழித்தடத்தில் விமான கட்டணங்கள் திடீரென 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. 

அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களில் பாகிஸ்தான் துப்பாக்கித் தொழிற்சாலை அடையாளங்களும் அமெரிக்கத் தயாரிப்பு துப்பாக்கியும் இருந்ததையடுத்து ராணுவம் நேற்று உறுதிபடுத்தியது. 

இதனால் ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் கெடுக்கும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் தற்போது அமர்நாத் புனித யாத்திரையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று லெப்டினண்ட் ஜெனரல் கன்வல்ஜீத் சிங் தில்லான் தெரிவித்தார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இங்கு தங்கியுள்ள அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும் உடனடியாக சொந்த ஊர் திரும்ப வேண்டும் என அம்மாநில அரசு நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதைத்ததொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அங்கு விமான கட்டணங்கள் திடீரென 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. 

இதுகுறித்து இக்ஸிகோ விமான நிறுவனத்தின் துணைத் நிறுவனர் ரஜினிஷ் குமார் கூறுகையில் ‘‘காஷ்மீர் அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக எச்சரிக்கை விடுத்தை தொடர்ந்து வெளியூர் நபர்கள் ஸ்ரீநகரில் இருந்து வெளியேறுவதற்காக வேகமாக விமானங்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

அதேசமயம் அடுத்த சில வாரங்களுக்கு ஸ்ரீநகருக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழல் விமான கட்டணங்கள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது’’ எனக் கூறினார். 


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x