

அயோத்தி பிரச்சினையில் சமரசக்குழு பலன் தராது என்பது எனக்கு முன்பே தெரியும் எனக் கூறியிருக்கிறார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
அயோத்தியில் நீண்டகாலமாக இருந்துவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சினையில் ஒருமித்த தீர்வு காண உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்கள் கொண்ட சமரசக் குழுவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது.
இக்குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டார். குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால், அயோத்தி நில விவகாரத்தில் சமரச முயற்சி கைகூடவில்லை என மத்தியஸ்த குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரதப் போருக்கு முன்னால் நடந்த சமரசமே தோல்வியில் முடிந்தது..
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (சனிக்கிழமை) நிகிழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, "அயோத்தி பிரச்சினையில் சமரசக் குழுவால் ஒருபோதும் தீர்வை எட்ட முடியாது என்பது எனக்கு ஏற்கெனவே நன்றாகத் தெரியும்.
இருந்தாலும் மூன்று பேர் கொண்ட அந்தக் குழுவின் முயற்சிக்கு எனது பாராட்டுகள்.
மகாபாராத போருக்கு முன்னாதாகவும் கூட கவுரவர்கள் - பாண்டவர்களுக்கு இடையே சமரசப் பேச்சு நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சு பலனற்றே போனது. அதுபோலத்தான் இப்போதும் இந்த சமரசக்குழு பலனில்லாமல் போகும் என்று நான் அறிந்திருந்தேன்" எனப் பேசினார்.
அவரது இந்த கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.