

நாடாளுமன்றத்திலும், தொகுதியிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பாஜக தனது எம்.பி.களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்துகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த பயிலரங்கில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக ஐடி பிரிவு தேசியத் தலைவர் அமித் மால்வியா ஆகியோர் வகுப்பெடுக்கின்றனர். சமூக வலைதள பயன்பாடு, நமோ ஆப் உபயோகிக்கும் முறை குறித்து சிறப்பு வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று பிரதமர் மோடி, எம்.பி.க்கள் தங்கள் அலுவல்களுக்கு இடையேயும் தொகுதி மக்களுடன் எப்படித் தொடர்பில் இருப்பது என வகுப்பெடுத்தார்.
விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
அப்போது அவர், "புதிதாக தேர்வாகும் எம்.பி.க்களுக்கும் அவரது தொகுதிமக்களுக்கும் இடையேயான உறவு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான உறவைப் போன்றது. மருமகள் வந்தவுடன் மாமியார் தனது மகனின் கவனம் முழுவதுமே மனைவி பக்கம் சென்றுவிட்டதாகக் கருதுவார்.
அதுபோலத்தான் தொகுதியில் உங்கள் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட நலன் விரும்பிகளும் மக்களும்கூட எம்.பி. இனிமேல் நம் தொலைபேசி அழைப்பை ஏற்பாரா? தொகுதிக்கு வருவாரா? என நினைப்பார்கள்.
ஒரு நல்ல மகன் அம்மா, மனைவி உறவை சரியாகக் கையாள்வதுபோலவே ஒரு சிறந்த எம்.பி. தனது அலுவல்களைப் பார்த்துக் கொண்டே தொகுதி மக்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
வார இறுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த 2 நாள் பயிலரங்கில் மக்களவை, மாநிலங்களவை பாஜக எம்.பி.க்கள் ஒருவர்கூட வராமல் இருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.