

புதுடெல்லி,
அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப பாஜக முன்னாள் தலைவர் கோவிந்தாச்சார்யா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலவழக்கு தொடர்பான விசாரணை நாள்தோறும் நடக்க இருக்கும் நிலையில், அதை நேரலையில் ஒளிபரப்பு செய்யக்கோரி பாஜக முன்னாள் தலைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான கோவிந்தாச்சார்யா, உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அயோத்தி்யில் சர்ச்சைக்குரிய நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லாலா, வக்பு வாரியம் ஆகியவை சமமாக பிரித்துக்கொள்ள கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே அயோத்தி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் சமரசப் பேச்சு நடத்த, உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவில் வாழும் கலைஅமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், சமரசப் பேச்சில் இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கு வரவில்லை எனத் தெரிவித்தது. இதையடுத்து, வரும் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்தார்.
இந்தசூழலில் பாஜக முன்னாள் தலைவரும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோவிந்தாச்சார்யா சார்பில் அவரின் வழக்கறிஞர் விராக் குப்தா இன்று உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் " கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நீதிமன்ற வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆனநிலையிலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
அயோத்தி வழக்கு தேசமுக்கியத்துவம் வாய்ந்தது. என்னுடன் சேர்த்து கோடிக்கணக்கான மக்கள் இந்த தீர்ப்பையும், விசாரணையையும் எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது இருக்கும் நடைமுறையால் அது செய்ய முடியாத நிலை இருக்கிறது.
அயோத்தி ராமர் கோயில் வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருக்கிறது, ஏனென்றால், ராமர் சிலை பல ஆண்டுகளாக சாதாரண தற்காலிக குடிலில் வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் கடந்த 9 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை தாமதமானதற்கு என்ன காரணம் என்பதையும் அறிய மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். டிஜிட்டல் சூப்பர் பவராக திகழும் இந்திய அரசு, அயோத்தி வழக்கை நேரலையில் ஒளிபரப்ப நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் " என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ்