Published : 03 Aug 2019 03:28 PM
Last Updated : 03 Aug 2019 03:28 PM

ஆந்திராவில் பள்ளி வகுப்பறைக்கு வரும் ஆச்சரியக் குரங்கு: ஒழுக்கம், கீழ்படிதலை பின்பற்றும் வினோதம்

கர்னூல்

கிளைக்குக் கிளை தாவி சக நண்பர்களுடன் ஆட்டம்போட வேண்டிய குரங்கு ஒன்று பள்ளி வகுப்பறைக்கு வந்து மாணவர்களைப் போலவே அமைதியாக கீழ்படிந்து நடந்து ஆந்திர பள்ளி ஒன்றின் சிறப்பு விருந்தினராக மாறியுள்ளது. 

பீப்புள்ளி மண்டலத்தின் வெங்கலம்பள்ளியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி கடந்த 12 நாட்களாக ஒரு விஐபி வருகை அங்குள்ளவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஐபி மாவட்ட கல்வி அலுவலரோ அல்லது பள்ளி ஆய்வாளரோ அல்ல. சாதாரண ஒரு நீண்டவால் குரங்குதான்.

பள்ளியில் வகுப்புகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருக்கும்போது, சாம்பல் நிறமுடைய இந்த நீண்ட வால் குரங்கு ஒன்று மாணவர்களுடன் சேர்ந்து வகுப்புகளில் வந்து அமர்ந்து பாடத்தை கவனிப்பதை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆரம்பத்தில் குரங்கை விரட்டிய அவர்கள் போகப்போக அதன் வருகையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

அதனால் இக்குரங்கு பள்ளிக்கு தொடர்ந்து வந்தது. மாணவர்களுடன் அமர்ந்து அவர்கள் பாடம் படிப்பதையும் உற்று கவனித்து வந்துள்ளது. போகப்போக அந்தக்குரங்கு அந்தப்பள்ளியின் மாணவன் போலவே மாறிப்போனது. 

தினமும் பள்ளிக்கு வருவதும், அமைதியாக மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கேட்பதுமாக அறிவுப் பசியைத் தேடும் செயலில் குரங்கு மாறிவிட்டது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அப்துல் லத்தீப் தெரிவித்ததாவது:

"மாணவர்கள் அந்த குரங்குக்கு லட்சுமி என்ற பெயரையும் வைத்துள்ளனர். இதில் விசித்திரமானது என்னவென்றால் குரங்குகளின் இயல்புக்கே உண்டான நடத்தைகளிலிருந்து இந்தக்குரங்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது. குரங்குளின் சேட்டைகள் போன்ற நடவடிக்கைகளில் லட்சுமி ஈடுபடுவதில்லை. அதற்கு பதிலாக, மிகவும் நல்ல மாதிரியாக நடந்து கொள்கிறது. மாணவர்களைப் போல ஒழுக்கம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகிய பள்ளி விதிகளை அது பின்பற்றுகிறது.

காலையில் லட்சுமி அசெம்பளி பிரார்த்தனைகளிலும் கலந்துகொள்கிறது. பின்னர் வகுப்புகளில் கலந்துக்கொள்கிறது, மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறது, வகுப்புகளுக்குப் பிறகு அவர்களுடன் சேர்ந்து விளையாடத் தொடங்கிவிடுகிறது. 

குரங்கு பள்ளி நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லதொரு நிகழ்வாக இருந்தாலும், வகுப்பறையில் அது இருப்பதால் மாணவர்கள் கவனம் சற்று திசைதிருப்பப்படுவதை ஆசிரியர்கள் கவனித்தனர். குரங்கு வகுப்புக்குள் வராமல் இருக்க,  வகுப்பு தொடங்கும் முன் அவர்கள் கதவை மூடிவிட்டு பாடம் எடுக்கத் தொடங்கினர். 

ஆனால் லட்சுமி ஆர்வம் காரணமாக ஜன்னல்கள் வழியாக எட்டிப் பார்த்து வகுப்பை கவனிக்க ஆரம்பித்தது. இது அனைத்து ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. அனைவரின் மனதிலும் இடம்பிடித்துவிட்டது.

இரண்டு நாட்களுக்குமுன் குரங்குக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக ஒரு கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்தோம், மாணவர்கள் கொடுத்த ஜங்க் ஃபுட் அதன் வயிற்றைக் கெடுத்திருக்கலாம் என்று மருத்துவர் கூறினார். உடல் நலம் சரியானப் பின், லட்சுமி இன்று பள்ளிக்குத் திரும்பியது.

இப்போது லட்சுமி பழங்களை மட்டும் உணவாக எடுத்துக்கொள்வதில் கண்டிப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு டஜன் வாழைப்பழங்களை அதற்கு கொடுப்பதற்காக வாங்குகிறார்கள். பள்ளி நாட்களில் மட்டுமல்ல எப்போதுமே, செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மாணவர்களுக்கு இப்போது நாங்கள் கற்பிக்கத் தொடங்கியுள்ளோம்”.

இவ்வாறு தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

மன அழுத்தத்தைப் போக்கும் செல்லப்பிராணிகள்

வளர்ந்த நாடுகளில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் தங்கள் சுமை நிறைந்த மாணவர்களுக்கு மன அழுத்த நிவாரணிகளாக செல்லப்பிராணிகளை வளர்ப்பதைத் பரிந்துரைக்கின்றன.

வெங்கலம்பள்ளி பள்ளியில் இதேபோன்ற செயலில் லட்சுமியும் ஈடுபட்டு வருகிறது. லட்சுமி வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் பள்ளியில் கிட்டத்தட்ட 100% வருகையை பதிவு செய்து வருவதாக தலைமை ஆசிரியர் கூறுகிறார்.

செல்லப்பிராணி மாணவர்களின் கல்வியில் தலையிடாத வரை, அவைகளை பள்ளியில் அனுமதிப்பதால் பள்ளியில் மாணவர்களின் ஆர்வம் கூடும்  என லத்தீஃப் நம்புகிறார்,  மாணவர்களின் கூடுதலான வருகைப்பதிவு நிச்சயம்  அவர்கள் கற்றலுக்கு உதவும்.


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x