Published : 03 Aug 2019 02:57 PM
Last Updated : 03 Aug 2019 02:57 PM

காஷ்மீரில் வீரர்கள் குவிப்பு; அரசியல் சட்டத்தில் மாற்றமா? - ஆளுநர் விளக்கம்

ஸ்ரீநகர்

காஷ்மீரில் பாதுகாப்புக்காக தான் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தகவல் எதுவும் இல்லை என ஆளுநர் சத்தியபால் மாலிக் விளக்கமளித்துள்ளார். 

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இங்கு தங்கியுள்ள அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும் உடனடியாக சொந்த ஊர் திரும்ப வேண்டும் என அம்மாநில அரசு நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதைத்ததொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தலைமையில் இன்று ஆளுநர் சத்தியபால் மாலிக்கை சந்தித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தலைமையில் இன்று ஆளுநர் சத்தியபால் மாலிக்கை சந்தித்தனர். அப்போது காஷ்மீரில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஆளுநர் விரிவாக எடுத்துரைத்தார்.

தீவிரவாதிகள் தற்போது அமர்நாத் புனித யாத்திரையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி எல்லையிலும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு எந்த அரசியல் நிகழ்வும் காரணமல்ல. 
அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக எந்த தகவலும் இல்லை. வீண் பதற்றத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம். 

பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மற்ற விவகாரங்களுடன் இணைந்து தேவையற்ற முறையில் பதற்றம் மற்றும் வீண் புரளியை கிளப்பக் கூடாது. பாதுகாப்பு நடவடிக்கைகக்கும் மற்ற விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

தீவிரவாத தாக்குதல் நடைபெறாமல் தடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. அதற்காகவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். 
இவ்வாறு ஆளுநர் சத்திய பால் மாலிக் சார்பில் ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x