Published : 03 Aug 2019 02:31 PM
Last Updated : 03 Aug 2019 02:31 PM

செய்தி சேனலின் நெறியாளர் முஸ்லிம் என்பதால் அவரை பார்க்க மறுத்து கண்களை மறைத்துக் கொண்ட இந்து அமைப்பின் தலைவர்

ஆர்.ஷபிமுன்னா

நெறியாளர் முஸ்லிம் என்பதால் செய்தி சேனலின் விவாதத்தில் கலந்துகொண்ட இந்து அமைப்பின் தலைவர் அவரை பார்க்க மறுத்து தன் கண்களை மறைத்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால், அவரை மீண்டும் தம் நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை என அந்த சேனலின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இருதினங்களுக்கு முன் பண்டிட் சுக்லா என்பவர் பீட்சா உணவு கேட்டு சொமாட்டோ நிறுவன இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதை ஏற்ற சோமாட்டோ சுக்லாவிற்காக உணவை கொண்டு வரும் ஊழியர் பெயரையும் குறிப்பிட்டு பதிலளித்திருந்தது. 

அதில் தன் உணவை கொண்டு வருபவர் ஒரு முஸ்லிம் என அறிந்தத சுக்லா, இந்து அல்லாதவர் கொண்டுவரும் உணவு எனக்கு தேவையில்லை எனவும், பணம் வாபஸ் இல்லை என்றாலும் தனது ஆர்டரை ரத்து செய்வதாகவும் கூறி விட்டார். 

இதற்கு அந்த நிறுவனம், ’உணவிற்கு மதம் இருப்பதில்லை. அந்த உணவே ஒரு மதம் தான்.’ என ட்விட்டரில் பதிலளித்திருந்தது. மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜபல்பூர் சம்பவத்தை மையமாக வைத்து ‘நியூஸ் 24’ எனும் இந்தி சேனலின் சண்டிகர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், கலந்துகொள்ள ’ஹம் இந்து (நாம் இந்து)’ எனும் வலதுசாரி அமைப்பின் தலைவர் அஜய் கவுதமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2015-ல் துவக்கப்பட்ட இந்த அமைப்பின் கொள்கை முழுமையான இந்து ராஜ்ஜியத்தை அமைப்பது ஆகும். 

ஆனால், நிகழ்ச்சியின் நெறியாளர் பெயர் காலீத் என அறிந்த அஜய் கவுதம், அவரைப் பார்க்க மறுத்து தன் கண்களை கைகளால் மறைத்தபடி பேசியுள்ளார். இதற்கு அவர் தாம் முஸ்லிம் நெறியாளரை கண்களால் பார்த்து பேச முடியாது எனவும் மறுத்து உள்ளார். 

இந்த நிகழ்ச்சியை நியூஸ் 24 ஒளிபரப்பவில்லை. எனினும், இந்த சம்பவத்தை மறுநாள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கண்டித்துள்ளது.

அதில், இனி அஜய் கவுதமை தம் நிகழ்ச்சிகள் எதற்கும் அழைப்பதில்லை என முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. அஜய் கவுதமின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து நியூஸ் 24 ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்கள் குவியத் துவங்கி உள்ளன. 

இதற்கிடையே, சோமாட்டோ சம்பவத்தில் ஜபல்பூர் மாவட்ட காவல்துறை தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த மாவட்டம் காங்கிரஸ் ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. 

இந்த வழக்கில், மதநல்லிணக்க சூழலை கெடுக்க முயன்றாதகப் புகார் கூறப்பட்டுள்ளது. இதன் மாவட்ட கண்காணிப்பாளரான அமித்சிங், இந்த சம்பவம் குறித்து அழைத்து விசாரிக்க இரண்டு தரப்பினருக்கும் நோட்டீஸ் அளித்துள்ளார். 

இந்நிலையில், சுக்லா மீது நடவடிக்கை எடுத்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த இருப்பதாக மபி மாநிலத்தின் வலதுசாரி அமைப்புகளில் ஒன்றான ’இந்து சேவா பரிஷத்’ அறிவித்துள்ளது. 

அதேசமயம், சோமாட்டோ நிறுவனத்தின் நடவடிக்கைக்கு சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அந்நிறுவனம் மீதான நடசத்திர மதிப்பீடுகளில் முதல்நிலையை பெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x