

டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில் பாஜக எம்.பி.க்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இன்றும் (ஆக 3) நாளையும் இந்த பயிற்சி நடைபெறுகிறது.
இதில், பாஜக மக்களவை மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மேற்குவங்க நிலவரம் என்ற தலைப்பில் சிறப்பு விவாதம் எம்.பி.க்கள் மத்தியில் நடைபெறுகிறது.
இதுதவிர சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது எப்படி? நமோ ஆப்-பை பயன்படுத்துவது எப்படி போன்ற தகவல்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேவும் பாஜக எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் குறிப்பாக புதிதாக எம்.பி.யானவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் இக்கூட்டத்தில் வழங்கப்படவுள்ளன.
இதில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, "நமது எண்ணங்களும் புதிய இந்தியா குறித்த கருத்தாக்கமும்" என்ற தலைப்பில் பேசுகிறார்.
பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் பூபேந்திரா யாதவ், நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கிறார். மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எம்.பி.க்கள் தொகுதி நிதி பற்றி விளக்குகிறார்.
நமோ ஆப் பற்றியும் சமூக ஊடகங்களைக் கையாள்வது குறித்தும் பாஜக ஐடி பிரிவின் தேசியத் தலைவர் அமித் மால்வியா விளக்குகிறார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாம், நமது அமைப்பு மற்றும் நம் வேலைக் கலாச்சாரம் (We, Our Organisation and Our Work Culture) என்ற தலைப்பில் பேசுகிறார்.
பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசும்போது தங்கள் தொகுதி மக்களின் பிரச்சினைகளை எப்படி அவையில் முன்வைப்பது என்பது பற்றியும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இதுதவிர நாளைய கூட்டத்தில் மேற்குவங்க நிலவரம் பற்றி சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இரண்டுநாள் நிகழ்வின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.