Published : 03 Aug 2019 09:57 AM
Last Updated : 03 Aug 2019 09:57 AM

கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் பாஜக ஆட்சி அமையும்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி

புதுடெல்லி,

திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் கேரள மாநிலத்திலும், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்கத்திலும் பாஜக ஆட்சி எதிர்காலத்தில் அமையும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியில் கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இருந்தன. ஆனால், திரிபுராவில் கால் நூற்றாண்டு ஆட்சியை பாஜகவிடம் இழந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அதேபோல, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் எழுச்சியால், கம்யூனிஸ்ட்டுகள் தோல்வி அடைந்தனர். 

இப்போது திரிபுராவில் பாஜகவும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும் ஆண்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் கடும் போட்டியாளராக பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.

திரிபுராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக 90 சதவீத இடங்களில் வென்று சாதனை படைத்தது. 116 பஞ்சாயத்துகளில் 114 இடங்களிலும், 419 பஞ்சாயத்து சமிதியில் 411 இடங்களிலும், 6 ஆயிரத்து 111 உள்ளாட்சிகளில் 5 ஆயிரத்து 916 இடங்களையும் பாஜக வென்றது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " திரிபுராவில் 25 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி நடத்தின. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சியை வீழ்த்தி பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் பாஜக ஆட்சி எதி்ர்காலத்தில் அமையும்.  

பாஜக மீதும், பிரதமர்  மோடி மீதும் திரிபுரா மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. பாஜகவின் கொள்கைக்கும், தேசத்தின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது" எனத் தெரிவித்தார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x