

புதுடெல்லி
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு கேரளாவில் ஆட்கள் சேர்த்த வழக்கில் பிஹாரை சேர்ந்த யாஸ்மீன் முகம்மது சாகித்துக்கு என்ஐஏ நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 15 இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் பயற்சி பெறுவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தெரியவந்தது. இது தொடர்பாக என்ஐஏ நடத்திய விசாரணையில் கேரளாவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் பிஹாரை சேர்ந்த யாஸ்மீன் முகம்மது சாகித் என்ற பெண் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனது குழந்தையுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற யாஸ்மீன், டெல்லி விமான நிலையத்தில் கடந்த 2016 ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இதில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் யாஸ்மீனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் யாஸ்மீன் தொடர்ந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகளாக குறைத்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக என்ஐஏ மற்றும் யாஸ்மீன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் யு.யு.லலித், இந்து மல்ஹோத்ரா ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் என்ஐஏ நீதிமன்றம் அறிவித்தபடி யாஸ்மீனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.