

புதுடெல்லி
தேசிய மருத்துவ மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனை டாக்டர்களின் ஸ்டிரைக் நேற்றும் தொடர்ந்தது.
63 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ கமிஷன் அமைப்பதற்கு வழி வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. ‘தேசிய மருத்துவ கமிஷன் மசோதா’ எனப்படும் இந்த மசோதா, எம்பிபிஎஸ். மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வை முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக (நெக்ஸ்ட்) தேசிய அளவில்
நடத்தவும் வழிவகை செய்கிறது.
இந்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் 29-ம் தேதி நிறைவேறியதை தொடர்ந்து, மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றக்குழு வழங்கிய 56 பரிந்
துரைகளில் 40-ஐ மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக கூறிய அவர், நாட்டின் மருத்துவத்துறையை மேம்படுத்த வேண்டியதற்கு இந்த மசோதா அவசியம் என்றும் தெரிவித்தார்.
தேசிய மருத்துவ கமிஷன் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறி இருப்பதை தொடர்ந்து விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாகும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கப்படும். மேலும் ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்தபடி அடுத்த 3 ஆண்டுகளில் நெக்ஸ்ட் தேர்வும் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த புதிய சட்ட மசோதா பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம்(ஐஎம்ஏ) சார்பில் நேற்றுமுன்தினம் தேசிய அளவில் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த தேசிய மருத்துவ மசோதாவை எதிர்த்து நேற்று அரசு டாக்டர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, சப்தார் ஜங் மருத்துவமனை, டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த ஏராளமான டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மசோதா தொடர்பான தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தை தொடங்குவோம் என்றும் டாக்டர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து அவர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் சந்தித்துப் பேசினார். அவர்களது போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று அமைச்சர் அப்போது கேட்டுக் கொண்டார். பின்னர் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த மசோதா தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை நான் டாக்டர்களுக்கு விளக்கினேன். மேலும் இந்த ஸ்டிரைக்கை கைவிடவேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். தேசத்தின் நலனுக்காகவும், டாக்டர்கள், நோயாளிகளின் நலனுக்காகவும் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் நான் அவர்களுக்கு விளக்கினேன்” என்றார்.
டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. அவசர சிகிச்சை உள்ளிட்டவற்றை மட்டுமே டாக்டர்கள் வழங்கினர். அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அவர்கள் நிறுத்தினர். இதனால் நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்ட தாகத் தெரியவந்துள்ளது. - பிடிஐ