

புதுடெல்லி
குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட்டிருக்கும் தூதரக உதவியானது அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருக்கக் கூடாது என பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தி யுள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவை கடந்த 2016-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, ஈரானில் பணிபுரிந்த குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் ராணுவத்தினர் கடத்திச் சென்று பொய் வழக்கு தொடுத்துள்ளதாக குற்றம்சாட்டியது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை கடந்த 17-ம் தேதி விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யும்படியும், அவருக்கு தூதரக உதவி கிடைக்க அனுமதி வழங்குமாறும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து, குல்பூஷண் ஜாதவை இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசுவதற்கு பாகிஸ்தான் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதுதொடர்பான கடிதத்தையும் இந்திய அரசுக்கு அந்நாடு அனுப்பி வைத்தது.
நிபந்தனை விதிப்பு?
அந்தக் கடிதத்தில், குல்பூஷண் ஜாதவை இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திக்கும்போது, பாகிஸ்தான் அதிகாரிகள் உடனிருப்பர் என நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிபந்தனைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், தூதரக உதவியானது அச்சறுத்தலுக்கு மத்தியில் இருக்கக் கூடாது எனவும் குல்பூஷணை சந்திக்கும்போது பாகிஸ்தான் அதிகாரிகள் உடன் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக இப்போது வெளிப்படையாக கூற முடியாது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பாகிஸ்தானின் நடவடிக்கை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.