

மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட அபு ஜுண்டாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மகாராஷ்டிரா அரசு அச்சம் கொண்டுள்ளது, என்று தேசிய புலனாய்வு முகமை டெல்லி நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இதன் காரணமாக அந்த முகமை தன்னுடைய மனுவில், `ஜுண்டாலின் உயிருக்கு ஆபத்து இருக்கும் காரணத்தினால் அவரை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடியாது' என்று கூறி யுள்ளது. அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2013 மே மாதம் மகாராஷ்டிரா அரசு தீர்மானம் ஒன்றை நிறை வேற்றியது. அதில், `மும்பை காவல் துறை ஆணையரின் ஆலோசனை யின் பேரில் ஜுண்டாலை நீதி மன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த முடியாது. வேண்டுமெனில், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்யலாம்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து ஜுண்டால் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே, மகாராஷ்டிரா அரசின் தீர்மானம் மற்றும் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஜுண்டாலை நேரில் ஆஜர்படுத்தும் விதியை நீதிமன்றம் தளர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இதுகுறித்து ஜூலை 17ம் தேதி விளக்கம் அளிக்க ஜுண்டாலின் வழக்கறிஞர் எம்.எஸ்.கானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.