லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தல்: மீட்பு நடவடிக்கை தீவிரம்

லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தல்: மீட்பு நடவடிக்கை தீவிரம்
Updated on
1 min read

லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு 11 மணிக்கு லிபியாவின் சிர்தே நகர சோதனைச் சாவடி அருகே 4 இந்தியர்களை சிலர் கடத்திச் சென்றதாக நேற்று இரவு (வியாழக்கிழமை) இரவு தகவல் வெளியானது. இந்தத் தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கடந்த 29-ம் தேதி லிபிய தலைநகர் டிரிபோலியில் இருந்து டுனீஸ் வழியாக இந்தியா திரும்பவிருந்த 4 இந்தியர்கள், சிர்தேவிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூவர் சிர்தே பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆவர், ஒருவர் சிர்தே பல்கலைக்கழக அலுவலகத்தில் பணியாற்றுபவர். இவர்களில் 2 பேர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கடத்தப்பட்டவர்களின் உறவினர்களோடு நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். கடத்தப்பட்ட 4 இந்தியர்களும் மீண்டும் சிர்தே நகருக்கே கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், லிபியாவுக்கான இந்திய தூதரகம் விசாரணையில் இறங்கி உள்ளது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக உள்ளது" என்றார்.

முன்னதாக இன்று காலை (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடியை சந்தித்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தப்பட்டது தொடர்பான தகவல்களை தெரிவித்தார்.

ஐ.எஸ்.-க்கு தொடர்பா?

இந்த கடத்தலில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஐ.எஸ். தீவிரவாதிகள் எந்த நிபந்தனைகளையும் இதுவரை முன்வைக்கவில்லை என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

39 பேர் நிலை என்ன?

ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டும் இராக்கின் மொசுல் நகரில் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில் தற்போது லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட 39 பேரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் இதுவரை உயிருடனே இருக்கின்றனர் என்பதை மட்டும் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in