

புதிய ராணுவ தளபதி நியமனம் தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறும் உயர்மட்ட கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராணுவத் தலைமை தளபதி விக்ரம் சிங் ஜூலை 31-ம் தேதி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில் துணைத் தளபதியான தல்பீர் சிங் சுஹாக்கை அடுத்த தலைமை தளபதியாக நியமிக்கும் நடை முறைகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியதாக தகவல் வெளியானது.
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. "நாட்டில் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. குறைந்தபட்சம் மே 16-ம் தேதி வரையிலாவது இதுபோன்ற நியமனங்களை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்" என பாஜக கூறியது.
இதனையடுத்து, புதிய ராணுவ தளபதி நியமனத்துக்கு அனுமதி கோரி தேர்தல் ஆணையத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியது.
நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி: "புதிய ராணுவ தளபதி நியமனம் தொடர்பாக அனைத்து விதிகளும் பின்பற்றப்படும். புதிய ராணுவ தளபதி நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது" என கூறியிருந்தார்.
முன்னதாக கடந்த மார்ச் 27-ல் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், பாதுகாப்புப் படையின் பணி நியமனங்கள், ஒப்பந்த புள்ளிகள், பதவி உயர்வுகள் மற்றும் ராணுவத்திற்கான பொருள் கொள்முதல் ஆகியவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் கீழ் வராது என தெரிவித்தது என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், புதிய ராணுவ தளபதி நியமனம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கை அடுத்த வாரம் நடைபெறும் உயர்மட்ட கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.