

ஜம்மு
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இங்கு தங்கியுள்ள அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும் உடனடியாக சொந்த ஊர் திரும்ப வேண்டும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. ஜம்முவில் இருந்து பக்தர்கள் குழுக்களாக சென்று பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். ஜூலை 29-ம் தேதி வரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 410 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
46 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15-ம் தேதி நிறைவடைகிறது. இந்தநிலையில் ஜம்மு - காஷ்மீரில் கடுமையான மழையை பெய்து வருவதால் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில்
ராணுவ அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘‘காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் மீது தீவிரவாதிகள் குறிவைத்துள்ளனர்.
அந்த பகுதியில் பிடிபட்ட தீவிரவாதியிடம் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. துல்லியமாக சுட உதவும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும்’’ எனக் கூறினர்.
இதையடுத்து காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாநில அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இங்கு தங்கியுள்ள அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும் உடனடியாக சொந்த ஊர் திரும்ப வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.