Published : 02 Aug 2019 04:55 PM
Last Updated : 02 Aug 2019 04:55 PM

‘காணாமல் போகும் கருப்பைகள்’- மருத்துவ ஊழல்களை ஒழிக்க சிறப்புப் படை : மத்திய அரசு திட்டவட்டம்

பணிக்காகவும், சம்பளத்துக்காகவும்  ஏழை தொழிலாளப் பெண்கள் குழந்தைப் பிறப்பை தடுக்கவும், மாதவிடாய் போன்றவை பணிக்கு இடையூறாக இருப்பதாலும் கருப்பையை அகற்றி விடும் பழக்கமும், அவர்களின் இந்த நிலையைப் பயன்படுத்தி பணம் குவிக்கும் மருத்துவமனைகளும், பணிநிமித்தமாக இதைச் செய்துகொள்வதால் ஒப்பந்ததாரர்களும் பெண்களுக்கு பணம் கொடுப்பதுமான ஒரு ஊழல் வலைப்பின்னல் நடவடிக்கை வட இந்திய கிரமாங்களில் இருந்து வருவதை சீரியஸாகப் பார்க்கும் அரசு மருத்துவ ஊழல்களைத்தடுக்க சிறப்புப் படைகளை அமைத்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாதாவில் கருப்பையை பெண்கள் அகற்றிவிடும் போக்கு பெரிய அளவில் காணப்படுவதாக தி இந்து பிசினஸ் லைன் எச்சரிக்கை ரிப்போர்ட் ஒன்றை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிக்கொண்டு வந்தது. இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிரா தலைமைச் செயலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

குழந்தைப் பிறப்பும், மாதவிடாயும் ஒரு புறம் பணிக்கு இடையூறாக இருப்பதாலும் இதனால் கூலிகளை இழக்க நேரிடுவதாலும் இளம் பெண்கள், அதாவது 22-23 வயதுப் பெண்கள் தாங்களாகவே கருப்பையை அகற்றிவிடுமாறு மருத்துவமனைகளை அணுக, இன்னொரு புறம் மருத்துவர்கள் வெள்ளைப்படுதல் அல்லது சிகப்பு ஒழுக்குகள் புற்று நோயின் அறிகுறி என்று ஏழைப்பெண்களை பயமுறுத்தி இதற்கு கருப்பையை எடுப்பதே வழி என்று அவர்களை பணத்துக்காகச் சுரண்டும் போக்கும் அம்பலமானது. இத்தகைய அநியாயங்களால் வட இந்திய கிராமப்புறங்களில் ஏழை தொழிலாளப் பெண்களின் கருப்பைகள் காணாமல் போகத் தொடங்கின.

இதனையடுத்து தேவையற்ற, ஆபத்தான கருப்பை அகற்ற அறுவைச் சிகிச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க மத்திய அரசு அதிரடிப்படைகளை அமைத்துள்ளது. 

இது தொடர்பாக தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை 3 மாநிலங்களில் நடத்திய விசாரணைகளில் குடும்பங்கள் சில கருப்பையை அகற்றுவதற்காகவே பெரிய அளவில் கடன் வாங்குவது தெரியவந்தது. இதன் மூலம் அடிமைத்தனத்துக்கும் கடனுக்கும் ஆளாகின்றனர். 

இத்தகைய நடைமுறைகளை தடுக்க மத்திய சுகாதார அமைச்சகம் மகப்பேறு மருத்துவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள், மற்றும் மாநில அதிகாரிகள் ஆகியோருடன் நாள் முழுதுமான கலந்தாலோசனை நடத்தியது. இந்த பெரிய ஊழல் மற்றும் அச்சுறுத்தலை தடுக்க தீர்வுகளுக்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

இதனையடுத்து 6 அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது, நாடு முழுதும் நடைபெறும் கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை தரவுகளைச் சேகரித்து தேசிய மட்ட ஆவணங்களைத் திரட்ட வேண்டும். மேலும் கிராமங்களில் தேவையற்ற கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

இந்த அதிரடிப்படைகளில் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரகர்கள், மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகள், சமுதாயத்திலிருந்து சில பிரதிநிதிகள், ஆகியோர் அடங்குவார்கள். அதே போல் பெண்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான மாற்று மருத்துவ முறைகளையும் பட்டியலிட வேண்டும். 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தாய்மார் ஆரோக்கியத் துறை துணை ஆணையர் கூறும்போது, “இந்தியாவில் 95% கருப்பை அகற்ற அறுவைசிசிக்கைகள் அனாவசியமானவையே, பெரும்பாலும் படிப்பறிவில்லாத பெண்களே இந்த வலையில் சிக்குகின்றனர். இப்போது ஏற்பட்டுள்ள தீர்வு பெண்களை இந்த தீங்கிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறேன்” என்றார். 

தனியார் மருத்துவமனைகள் பெரிய அளவில் பணம் பார்ப்பதற்காக கிராமப் பெண்களின் அறியாமையைப் பயன்படுத்துவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு அதிக பணம் செலவாவதால் பெண்கள் பெரும்பாலும் அடிமைத்தளையில் போய் சிக்குகின்றனர். 

இந்தியாவில் மட்டும் சுமார் 80 லட்சம் நவீன அடிமைகள் உள்ளனர், இவர்கள் பண்ணைகள், வயல்வெளிகள், தொழிற்சாலைகள், மீன்பிடித் தொழில் ஆகியவற்றில் உள்ளனர் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறக்கட்டளையான வாக் ஃப்ரீ பவுண்டேஷனின் குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் கூறுகிறது. 

தற்போது அரசின் கவனம் இதன் மீது விழுந்து அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

-தி இந்து பிசினஸ்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x