

லக்னோ,
உத்தரப்பிரதேசம், உன்னாவ் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் புதிதாக கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு பலாத்காரம் செய்ததாக, எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு பதிவாகி, அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை திட்டமிட்டு செங்கார் ஏற்படுத்தினார் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வழக்கின் விசாரணையை டெல்லிக்கு மாற்றியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சமும் வழங்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. எம்எல்ஏ செங்கார் உள்பட 10 பேர் மீது சிபிஐ கொலைவழக்கும், பலாத்கார வழக்கும் பதிவு செய்தது.
இதற்கிடையே எம்எல்ஏ செங்காருக்கு ஆதரவாக " ஐ சப்போர்ட் குல்தீப் செங்கார்" என்ற தலைப்பில் ஒருபுதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்துக்கு ஆதரவாக 166 பேர் லைக் செய்தும், 167 பேர் பின்தொடர்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த பக்கத்தை ஆதரித்தவர்கள் பெரும்பாலானோர் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், எம்எல்ஏவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் என்பது தெரியவந்துள்ளது
இந்த பக்கத்தை பின்தொடரும் ஆதரவாளர் திரு சிங் ரதோர் கூறுகையில், " உண்மை தடுமாறும், ஆனால், தோற்கடிக்க முடியாது, மிகப்பெரிய சதியால் செங்காருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சர்மா வெளியி்ட்ட பதிவில், " என்னுடைய பலமாக நீங்கள் இருந்தால், என்னோடு இணையுங்கள், எனக்கு எதிராக இருந்தால், சதிகாரர்களுடன் செல்லுங்கள் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ்