

புதுடெல்லி
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட (திருத்த) மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வாக்களித்ததால் 147 வாக்குகளுடன் நிறைவேறியது. எதிராக 42 வாக்குகள் மட்டுமே பதிவாகின.
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது. ஆட்கடத்தல், கள்ளநோட்டு உள்ளிட்ட குற்றங்களை என்ஐஏ விசாரிக்கவும், தீவிரவாத வழக்கில் இந்தியாவுக்கு வெளியில் விசாரணை நடத்த என்ஐஏ-வுக்கு அதிகாரம் வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.
இந்நிலையில், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட (திருத்த) மசோதா மக்களவை யில் தாக்கல் செய்யப்பட்டது. தீவிரவாத செயலில் தொடர்புடைய தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.
தீவிரவாத வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சொத்துகளை பறிமுதல் செய்ய என்ஐஏ-க்கு அதிகாரம் வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. இப்போது உள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட மாநில டிஜிபியிடம் அனுமதி பெற்ற பிறகே சொத்துகளை பறிமுதல் செய்ய முடியும்.
இதுபோல இப்போதைய சட்டப்படி காவல் துறை துணை கண்காணிப்பாளர் அல்லது உதவி ஆணையர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் மட்டுமே விசாரணை நடத்த முடியும். என்ஐஏ-வின் ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் அதிகாரம் பெற்றவர் கள் விசாரிக்க புதிய மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதை வலியுறுத்தி அவர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஆனால் தீர்மானத்துக்கு ஆதரவாக 85 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 104 வாக்குகள் பதிவாகின. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் மசோதா தோற்கடிக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பான விவாதம் தொடர்ந்தது. மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விவாத்தில் கலந்து கொண்டு பேசினர். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறினர்.
அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில் ‘‘ஒரு தீவிரவாத அமைப்பை தடை செய்தால், அந்த அமைப்பை நடத்திய நபர் வேறு ஒரு அமைப்பை சுலபமாக தொடங்கி விடுகிறார். எனவே, தீவிரவாத செயலில் தொடர்புடைய தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்க வேண்டியது அவசியம்’’ என்றார்.
பின்னர் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 147 வாக்குகள் கிடைத்தன. அதேசமயம் எதிராக வெறும் 42 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகும்.