Published : 02 Aug 2019 01:43 PM
Last Updated : 02 Aug 2019 01:43 PM

எமர்ஜென்சியில் என்ன நடந்தது? -  கடந்த காலத்தை திரும்பிப் பாருங்கள்: காங்கிரஸ் மீது அமித் ஷா கடும் சாடல்

புதுடெல்லி

நெருக்கடி நிலையின்போது என்ன நடந்தது, தீவிரவாத தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்துவதாக புகார் கூறும் நீங்கள், உங்கள் கடந்த காலத்தை முதலில் திரும்பிப் பாருங்கள் என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸை கடுமையாக தாக்கி பேசினார். 

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. தீவிரவாத செயலில் தொடர்புடைய தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

அப்போது முன்னாள் உள்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சிதம்பரம் பங்கேற்று பேசுகையில் ‘‘தீவிரவாத செயல்களை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் தவறல்ல. இதுபோன்ற நடவடிக்கைகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் எடுக்கப்பட்டது. ஆனால் தனிநபர்களை தீவிரவாதிகளாக அறிவிப்பது என்பது சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பாக அமையும்’’ என்றார்.

இதுபோலவே காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேசுகையில் ‘‘தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே புகார் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. உங்கள் நோக்கம் தான் இதில் பிரச்சினையாக உள்ளது’’ என்றார்.

அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
ஒரு தீவிரவாத அமைப்பை தடை செய்ய இப்போதைய சட்டத்தில் இடம் உள்ளது. ஒரு அமைப்பை தடை செய்தால், அந்த அமைப்பை நடத்திய நபர் வேறு ஒரு அமைப்பை சுலபமாக தொடங்கி விடுகிறார். 

தீவிரவாதம் என்பது குறிப்பிட்ட சிலருடைய மனப்போக்கு. எனவே, தீவிரவாத செயலில் தொடர்புடைய தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்க வேண்டியது அவசியம். இதற்கு ஐ.நா.சபை வழிவகை செய்கிறது.

அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றில் இது நடைமுறையில் உள்ளது. இதன் அடிப் படையில்தான் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. 
என்ஐஏ அமைப்பு பதிவு செய்துள்ள வழக்குகள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுகின்றன. யார் மீது காழ்புணர்ச்சியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எந்த புகாரும் இல்லை. சட்டத்தை தவறாக கையாள்வதாக புகார் கூறுபவர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நெருக்கடி நிலையின்போது என்ன நடந்தது. அனைத்து ஊடகங்களும் தடை செய்யப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 19 மாதங்களாக நாட்டில் ஜனநாயகம் இல்லை.

ஆனால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக நீங்கள் புகார் கூறுகிறீர்கள். உங்கள் கடந்த காலத்தை முதலில் திரும்பி பாருங்கள். 

இவ்வாறு அமித் ஷா பேசினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x