காபி டே உரிமையாளரின் மரணத்தில் விலகாத மர்மங்கள்

காபி டே உரிமையாளரின் மரணத்தில் விலகாத மர்மங்கள்
Updated on
2 min read

இரா.வினோத்

பெங்களூரு

கபே காபி டே உரிமையாளரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வின் மருமகனுமான வி.ஜி. சித்தார்த்தா வின் திடீர் மரணத்தின் பின்னணியில் வேறு சில மர்மங்களும் சந்தேகங்களும் நிறைந்திருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தற்கொலை செய்ததாக கூறப்படும் கபே காபி டே உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தாவின் உடலை நேற்று முன்தினம் காலை மங்களூரு அருகே ஹொய்கே பஜார் ஆற்று கரையில் மீட்டனர். வி.ஜி.சித்தார்த்தா விழுந்ததாக கூறப்படும் நேத்ராவதி ஆற்றின் இடத்துக்கும் அவரது உடல் கைப்பற்ற இடத்துக்கும் சுமார் 6 கிமீ தூரம் இருக்கும்பட்சத்தில் உடலில் பெரிய அளவில் காயம் எதுவும் இல்லை.

அவரது உடலில் பேன்ட், ஷூ எல்லாம் அணிந்தவாறு இருந்த நிலையில் டி- ஷர்ட் மட்டும் காணவில்லை. அவரது பேன்ட் பாக்கெட்டில் பர்ஸ், கிரெடிட் கார்ட், அடையாள அட்டை எல்லாம் கிடைத்த நிலையில் செல்போன் மட்டும் காணவில்லை. ஆற்றில் அடித்து செல்லப்பட்டபோது டி - ஷர்ட் கழன்று இருக்கலாம் எனக் கூறினாலும், பேன்ட், ஷூ, பர்ஸ் அடித்து செல்லப்படாதது ஏன் என சந்தேகம் எழுகிறது.

உடல் ஏன் மிதக்கவில்லை

நேத்ராவதி ஆற்றில் வி.ஜி.சித்தார்த்தா வின் உடலை கண்டெடுத்த‌ மீனவர் ரித்தேஷ், ‘‘இந்த ஆற்றில் விழுந்து யாரேனும் உயிரிழந்தால் 24 மணி நேரத்தில் அவர்களது உடல் நீரின் மேற் பரப்பில் மிதக்கும். வி.ஜி.சித்தார்த்தா வின் உடல் 36 மணி நேரம் ஆற்றில் கிடந் தும் ஏன் மிதக்கவில்லை? ஒருவேளை ஆற்றின் கழிமுக பகுதியில் கிடந் ததால் உப்பு கலந்து இருந்ததால் மேலே மிதக்கவில்லையா என தெரியவி ல்லை''என சந்தேகம் கிளப்பியுள்ளார்.

இதேபோல வி.ஜி.சித்தார்த்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த வென்லாக் மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘அவரது உடல் ஆற்றில் மிதக்காததற்கு காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. ஒருவேளை நீரில் மூழ்கி இறக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். அதன் மூலம் உயிர் பிரிந்திருந்தால் நீரில் மிதப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். வி.ஜி.சித்தார்த்தாவின் உடலை கஸ்தூரிபா மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் பிரதீக் ரஸ்தோகி, ரஷ்மி ஆகியோர் சுமார் 3 மணி நேரம் கூராய்வு செய்தனர். அப்போது அவரது இடது கை, வலது கால், இடுப்பு ஆகிய பகுதிகளில் காயம் இருந்ததை பார்த்துள்ளனர். அவை மீன்களினால் ஏற்பட்ட காயம்போல தெரியவில்லை. இந்த உடல் தசை மாதிரியை தடயவியல் சோதனைக்காக தாவணகெரே மற்றும் கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்''என்றனர்.

மரண கடிதம் உண்மையா?

இதனிடையே மங்களூரு காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் தலைமை யிலான போலீஸார் வி.ஜி.சித்தார்த்தா வின் மரணம் குறித்து அவரது கார் ஓட்டு நர் பசவராஜ் பாட்டீலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எதற்காக ச‌க்லேஷ்பூர் செல்லும் திட்டம் மாற்றப் பட்டது? மங்களூரு சென்றது ஏன்? அவர் ஆற்றில் விழுந்ததாக கூறப்படும் நேரத்தில் எங்கிருந்தீர்கள்? யாருடன் தொலைபேசியில் பேசினார்? ஏன் தாமதமாக போலீஸில் புகார் அளித்தீர்கள்? அவர் மாயமான தகவலை யாருக்கு முதலில் தெரிவித்தீர்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் வி.ஜி.சித்தார்த்தாவின் செல்போன் அழைப்புகள், கடைசியாக யாரிடம் பேசினார்? மின்னஞ்சல் தொடர்புகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதில் அவர் மாயமாவதற்கு முன்பு தன் மனைவி மாளவிகா, கபே காபி டேவின் முதன்மை நிதி அதிகாரி, கபே காபி டே எஸ்டேட் மேலாளர் உள்ளிட்டோருடன் பேசியது தெரியவந்தது.

இதனிடையே பெங்களூரு விரைந் துள்ள 4 அதிகாரிகள் வி.ஜி.சித்தார்த் தாவின் குடும்பத்தார்,உறவினர்கள், உதவி யாளர், நிறுவனத்தின் முக்கிய அதி காரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். அப் போது அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் எங்கு கிடைத்தது? யாருக்கு கிடைத்தது? அதில் ஏன் 27-ம் தேதியிட்டு கடிதம் எழுதினார்? அந்த கடிதத்தை தட்டச்சு செய்தது யார்? ஏன் கைப்பட எழுதவில்லை? தற்கொலை செய்து கொண்டார் என்றால் ஏன் நேத்ராவதி ஆற்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என விசாரித்துள்ளனர்.

அப்போது, அந்த கடிதம் அவர் இறப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே அவரது பெண் உதவியாளருக்கு டிக்டேட் செய்துள்ளார். அவர் 27-ம் தேதி தட்டச்சு செய்ததாக தெரியவந்தது. அப்படியென்றால் அவர் ஒரு வாரத்துக்கும் மேலாக தற்கொலை முடிவில் இருந்தாரா? ஒருவார காலமாக முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையா? குடும்பத்தாரிடம் எப்படி பழகினார் என போலீஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த‌ கடிதத்தில் உள்ள வி.ஜி.சித்தார்த்தாவின் கையெழுத்து தங்களிடம் உள்ள ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் கையெழுத்துடன் பொருந்தவில்லை என‌ வருமான வரித்துறை கூறியுள்ளது. எனவே அந்த கடிதத்தை வி.ஜி.சித்தார்த்தாவின் மரண வாக்குமூலமாக கருதலாமா? என முடிவெடுப்பதில் சிக்கல் இருக்கிறது. எனவே கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக, தடயவியல் துறையின் உதவியை நாட போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கபே காபி டேவின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுள்ள ரங்கநாத், ‘‘அந்த கடிதம் உண்மையா என்பது தெரியவில்லை. அந்த கடிதம் குறித்தும், வி.ஜி.சித்தார்த்தாவின் மரணம் குறித்தும் போலீஸார் மேற்கொள்ளும் விசாரணைக்காக நாங்கள் காத்திருக்க போவதில்லை. எங்கள் நிறுவனம் மூலமாக‌ தனியாக விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளோம்'' என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in