

புதுடெல்லி,
உன்னாவ் பலாத்கார வழக்கை உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக் கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக அவரை போலீஸார் கைது செய்தனர், பாஜகவிலும் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ செங்கார், இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட பெண்ணும், உறவினர்கள் சிலரும், வழக்கறிஞருடன் ரேபரேலி சிறையில் உள்ள தங்கள் உறவினரை சந்திக்கச் சென்றனர். அப்போது லாரி ஒன்று காரின் மீது விபத்துக்குள்ளானது. அதில் காரில் பயணம் செய்த இரு பெண்கள் பலியானார்கள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் படுகாயத்துடன் உயிர்பிழைத்தனர்.
இதையடுத்து, உன்னாவ் பலாத்கார வழக்கு, விபத்து நடந்த வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றியது உத்தரபிரதேச அரசு. இதைத்தொடர்ந்து எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, கொலைமுயற்சி, பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிஐ.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வழக்கை விசாரிக்காமல் வெளிமாநிலத்தில் விசாரிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உன்னாவ் பலாத்கார வழக்கு, பாதிக்கப்பட்ட சிறுமி பயணித்த காரை விபத்துக்குள்ளான வழக்கு என வழக்கின் அனைத்து விவரங்களையும் எனக்கு தேவை என்பதை சிபிஐ இயக்குநருக்கு தெரிவியுங்கள் என்று சொலிசிட்டர் ஜெனரலிடம் தலைமை நீதிபதிதெரிவித்தார்.
மாலைக்குள் அனைத்து விவரங்களையும் அளி்க்கவும் உத்தரவிட்ட தலைமை நீதிபதி 2மணிக்கு மேல் வழக்கை மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்தனர். இதன்படி நண்பகலில் நீதிமன்றம் கூடியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பிறப்பித்த உத்தரவில், " உன்னாவ் பலாத்கார வழக்கோடு தொடர்புடைய 5 வழக்குகளின் விசாரணையையும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றுகிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடுகிறோம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரின் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், உள்ளிட்ட 4 உறவினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவர்கள் கிராமத்தில் இருந்தாலும் சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் பயணித்த கார் விபத்துக்குள்ளான வழக்கில், சிபிஐ 7 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும். உன்னாவ் பலாத்கார வழக்கின் விசாரணையை டெல்லியில் உள்ள நீதிமன்றம் நாள்தோறும் விசாரணையை நடத்தி 45 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்,வழக்கறிஞர் ஆகியோருக்கு தேவைப்பட்டால் டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துவந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம். இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடர்ந்து நடக்கும் " என உத்தரவிட்டனர்.
ஏஎன்ஐ