Published : 01 Aug 2019 02:28 PM
Last Updated : 01 Aug 2019 02:28 PM

நாங்கள் ஏழைகள்,வேறு என்ன செய்ய முடியும்: சொமாட்டோ ஊழியர் வேதனை: ப.சிதம்பரம் ட்வீட்

புதுடெல்லி,

இந்து அல்லாதவர் உணவு எடுத்து வந்ததை விரும்பாத வாடிக்கையாளர் அதை ரத்து செய்ததைத் தொடர்ந்து அந்த உணவை எடுத்துச் சென்ற ஊழியர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். 

நாங்கள் ஏழைகள், வேறு என்ன முடியும், இந்த சம்பவம் எனக்கு வேதனையாக இருக்கிறது என்று சொமாட்டோ ஊழியர் பயாஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த பண்டிட் அமித் சுக்லா எனும் வாடிக்கையாளர், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் பெற்று டெலிவரி செய்யும் சொமேட்டோ நிறுவனத்திடம் உணவு ஆர்டர் செய்தார். அவருக்கான உணவை ஓட்டலில் பெற்று யார் உணவைக் கொண்டு வருவார்கள் எனும் பெயரையும் அவருக்கு சொமேட்டோ நிறுவனம் பதிவிட்டது. 

இதைக் கண்ட உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளர் சொமேட்டோ நிறுவனத்தின் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டார். அதில் " நான் சொமேட்டோவில் ஆர்டர் செய்திருந்திருந்ததை ரத்து செய்கிறேன். நான் ஆர்டர் செய்திருந்த உணவை இந்து அல்லாத ஊழியரை எனக்கு டெலிவரி செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.

நான் உணவு டெலிவரி செய்பவரை மாற்றுங்கள் என்று கூறியும் அவர்கள் மாற்ற முடியாது, பணத்தையும் திரும்பத் தரமுடியாது என்று தெரிவித்துவிட்டார்கள். என்னை உணவை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம், ஆர்டரை ரத்து செய்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார். 

அதுமட்டுமல்லாமல் இந்த உரையாடலை அந்த வாடிக்கையாளர் செல்போனில் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வழக்கறிஞர் மூலம் இதைக் கொண்டு செல்வேன் எனவும், இந்து அல்லாதவர் மூலம் எடுத்துவரப்படும் உணவை விரும்பவில்லை எனவும்  சொமேட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் தெரிவித்தார்.

இதற்கு சொமேட்டோ நிறுவனம் அளித்த பதிலில், " உணவுக்கு மதம் இருப்பதில்லை. உணவே மதம்தான்" எனத் தெரிவிக்கப்பட்டது.   சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசியக் கொடியின் படத்தைப் பதிவிட்டு, " தேசத்தை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். வேறுபட்ட தளத்தில், பல்வேறுவகையான  எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் இருக்கிறார்கள். எங்களின் அடையாளங்களை இழந்து பெறும்  லாபத்தை  இழந்ததற்காக வருத்தப்படவி்ல்லை" எனத் தெரிவி்த்திருந்தார்.

இதனிடையே இந்த உணவை எடுத்துச் சென்ற ஊழியர் பயாஸ்-க்கு தன்னுடைய ஆர்டர் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் ஏதும் தெரியாமல் 2 மணிநேரம் இருந்துள்ளார்.அதன்பின் சமூக ஊடகங்களில் எழுந்த விவாதங்கள் குறித்து அறிந்தபின் அவர் அனைத்து விவரங்களையும் அறிந்தார்.

இதுகுறித்து பயாஸிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், " இந்த சம்பவம் எனக்கு வேதனையாக இருக்கிறது. என்ன செய்ய முடியும் சார், நாங்கள் எல்லாம் ஏழைகள். இந்த துன்பத்தை அனுபவித்து பொறுத்துதான் போக வேண்டும் " எனத் தெரிவித்தார்.

‘இனி சொமாட்டோவில்தான் ஆர்டர் செய்வேன்’ ப.சிதம்பரம் ட்வீட்

சொமாட்டோ நிறுவனத்தின் ட்விட்டர் பதில் குறித்து அறிந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் மறைமுகமாக பாராட்டியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், " நான் இதுவரை சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்தது இல்லை. ஆனால் இப்போதிலிருந்து சொமாட்டோவில் இருந்து உணவு ஆர்டர் செய்யலாம் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

சொமாட்டோ நிறுவனத்தின் பதில் குறித்து ஏராளமான வாடிக்கையாளர்கள் பாராட்டுத் தெரிவித்து ரீட்வீட் செய்துள்ளனர். ட்விட்டரிலும் நேற்று சொமாட்டோவின் பெயர் ட்ரண்டாகியது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x