Published : 01 Aug 2019 02:37 PM
Last Updated : 01 Aug 2019 02:37 PM

1 கிலோ ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம்போன தேயிலை: எப்படி தயாரிக்கப்படுகிறது?-சுவாரஸ்ய தகவல்

கடைகளில் தேநீர் விலையை 2 ரூபாய் ஏற்றினாலே ஆதங்கப்படும் இந்தியாவில், வேறெங்கும்  இல்லாத அளவுக்கு ஒரு கிலோ தேயிலைத் தூள் ரூ.50 ஆயிரத்திற்கு  ஏலம் விடப்பட்டுள்ளது என்று சொன்னால் நம்ப முடியுமா? உண்மையில் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வு இது.

கவுகாத்தியில் கடந்த செவ்வாய் அன்று கவுகாத்தி டீத்தூள் ஏலம் விடும் மையத்தில் அதிக விலைக்கு ஏலம்போன மனோகரி கோல்டு டீத்தூள் பற்றி நாடெங்கும் செய்தியாகப் பரவியபோது பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

அதிக விலை கொடுத்து வாங்க அத் தேயிலையில் அப்படி என்ன சிறப்பு? இண்டியா ராஜா லோஹியா புரொடியூசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லோஹியா இதுகுறித்து தி இந்துவிடம் பேசியதாவது: 

"எங்கள் நிறுவனத்தின் சிறப்புத் தயாரிப்பான மனோஹரி கோல்டன் டீக்கென்று தனி மகத்துவம் உண்டு. அதன் மருத்துவ குணங்களும் அளப்பரிய சுவையும்தான் இதற்குக் காரணம். வழக்கமான தேயிலைத் தூள்களைப்போல இயந்திரத்தால் இது அரைக்கப்படுவதில்லை, முழுக்கமுழுக்க பாரம்பரிய முறையில் மனித உழைப்பால் தயாரிக்கப்படுகிறது. 

இந்தமுறை 5 கிலோ தயாரித்தோம், ஆனால் 2 கிலோ மட்டுமே ஏலத்தில் விற்கப்பட்டது. அடுத்த ஆண்டு இதே காலகட்டத்தில் இதை விட அதிகமாக உற்பத்தி செய்ய சாதகமான நிலைமைகள் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், இதே தோட்டத்திலிருந்து 1,000 ஏக்கரில் தயாரிக்கப்பட்ட தேயிலை இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு ஒரு கிலோ 39,001-க்கு ஏலம் விடப்பட்டு ஒரு சாதனைப் படைத்தது. 

இந்த தங்கத் தேயிலை பாரம்பரிய சிறப்புமிக்க பி -126 ரக தேயிலைச் செடியின் இளந்தளிர்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை மொட்டு என்றே நாங்கள் அழைக்கிறோம். சரியான கால நிலைகளின் கீழ் வளர்க்கப்படும் மிகச்சிறந்த தேயிலை இது இரண்டாவது பறிப்பிலிருந்து மட்டும் இது கிடைக்கிறது. 

ஒரு மொட்டு என்பது தேயிலை செடியின் ஒரு கிளையின் நுனியில் மட்டும் திறந்திருக்கும் தளிர். அசாமில் ஆண்டுக்கு நான்கு முறை அறுவடை செய்யப்படும் செடிகளின் முனையில் உள்ள இரண்டு மென்மையான இலைகளையும் ஒரு மொட்டையும் பறிப்பதே இதன் விதிமுறை.

பொதுவாக தேயிலைகளின் 'முதல் பறிப்பு' மார்ச் மாத இறுதியில் எடுக்கப்படுகிறது, மே முதல் ஜூன் வரை 'இரண்டாவது பறிப்பு', ஜூலை-செப்டம்பர் முதல் 'மூன்றாவது பறிப்பு' மற்றும் அக்டோபர்-நவம்பர் முதல் 'நான்காவது பறிப்பு' ஆகும். 

இந்த உயர்ந்த ரக தேயிலையைத் தயாரிக்க 6 கிலோ தேயிலை மொட்டுகள் தேவைப்படுகின்றன. இவைகளை காய்ச்சும்போது தங்க நிறத்தை அளிக்கிறது. மார்க்கெட்டுக்கு அனுப்பப்படும் ஒரு கிலோ தேயிலைத் தூள் தயாரிக்க 4.5 கிலோ தேயிலை இலைகள் வேண்டியிருக்கும். இலைகளைப் பறித்து டீத்தூள் ஆக உற்பத்தி செய்ய ஒவ்வொரு கிலோவும் ஒரு வார கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது.

2018 -ம் ஆண்டில் எங்கள் பணியாளர்களின் கடின உழைப்புக்கு உரிய பலனளிக்குமா? என்று உறுதியாக தெரியாத நிலையில்தான் இதைத் தொடங்கினாம். இதை ருசித்த மக்கள் டார்ஜிலிங் தேநீர் மற்றும் அவர்கள் இதுவரை ருசித்த மற்ற எல்லா தேநீரையும் விட சிறந்தது என்று கூறினர்," 

இவ்வாறு நிறுவனர் லோஹியா தெரிவித்தார். 

கோல்டன் தேயிலை உற்பத்திப் பணியில் ஈடுபடும் தோட்டத் தொழிலாளர்களிடம் பேசியபோது, ''அதிக மதிப்புள்ள தேயிலை தயாரிப்பது எளிதல்ல. மிகச் சிறந்த சூழல் நிலவும் பருவத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இதன் உற்பத்தி நடைபெறும். அச்சமயத்தில் மனோஹரி தேயிலை தோட்டத்தில் மட்டுமே எங்கள் அனைவரது கவனமும் இருக்கும்'' என்றனர்.
  
இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் சென்ற ஆண்டு 2 கிலோ வாங்கிய 'சவுரப் டீ டிரேடர்ஸ்'  விநியோக நிறுவனத்தைச் சேர்ந்த மாங்கிலால் மஹேஸ்வரிதான் இந்த முறையும் அதிக விலை கொடுத்து இந்தத் தேயிலையை வாங்கியுள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம், ''சென்ற முறை மனோஹரி கோல்ட் டீயை எங்களிடம் வாங்கி சுவைத்தவர்கள் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்டதுதான்''.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x