தள்ளிப்போகும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகே காரிய கமிட்டி கூட்டம்

தள்ளிப்போகும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகே காரிய கமிட்டி கூட்டம்
Updated on: 
1 min read

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முடிந்த பிறகே காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் வென்று, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.

ஆனால், ராகுல் காந்தி தலைவராக இருக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், அவர் தனது முடிவை மாற்றாமல் இருநது வருகிறார்.

இதையடுத்து காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 2 மாதங்களாகியும் இன்னமும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட வில்லை. 

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வருவதால் அனைவரும் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியது உள்ளது. கட்சி எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் அனைவரும் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி வருகிறோம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகே காரியக் கமிட்டியை கூட்ட வாய்ப்புள்ளது. அந்த கூட்டத்தின் பேசுபொருள் குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை’’ எனக் கூறினார். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in