

புதுடெல்லி,
உத்தரப்பிரதேசம், உன்னாவ் பலாத்காரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பங்கார்மாவு தொகுதி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடந்த 2017-ம் ஆண்டு பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் செங்காரை கைது செய்தனர், பாஜகவில் இருந்தும் செங்கார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார்.
இதையடுத்து சிறுமி பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்கு ஆகியவை சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாஜக எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு இன்னும் பாஜக அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்குகிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக உ.பி. பாஜக மாநிலத்தலைவர் ஸ்வதந்திரா தேவ் கூறுகையில், " உன்னாவ் பலாத்காரத்தில் தொடர்புடைய எம்எல்ஏ குல்தீப் செங்காரை ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டோம். தொடர்ந்து அவர் சஸ்பெண்டில்தான் இருக்கிறார் " எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உன்னாவ் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படுவதையடுத்து, எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்தே நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
ஏஎன்ஐ