

புதுடெல்லி,
உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் கதிதான் எனக்கும் ஏற்படுமா?, நாங்களும் புகார் செய்தால் விபத்து நடக்குமா? என்று பள்ளி மாணவி, கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், பாரபங்கி போலீஸ் எஸ்.பி. திக்குமுக்காடிப்போனார்.
உத்தரப் பிரதேசம், பங்கர்மாவு சட்டப் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டு, சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உன்னாவ் நகரில் உள்ள மகி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி, பாஜக எம்எல்ஏ செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார்.
முதல்வர் ஆதித்யநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்குளிக்க முயன்றபோதுதான் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவியது. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி செங்காரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாதிக்கப்பட்ட பெண், அவரின் உறவினர் இன்னும் சிலர் காரில் தங்களுடைய வழக்கறிஞருடன் ரேபரேலி சிறையில் இருக்கும் உறவினரைச் சந்திக்க சென்றனர்.
அப்போது சாலையில் இவர்கள் சென்ற காரின் மீது லாரி ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் படுகாயமடைந்தார். உடன் சென்ற இரு பெண்கள் பலியாகினர். வழக்கறிஞர் ஒருவரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
இது விபத்து என்று கூறப்பட்டாலும், இது விபத்து அல்ல. சதி இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கபட்டது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது விபத்து, கொலை வழக்கு, கொலை முயற்சி, பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பாரபங்கி மாவட்டத்தின் வடக்குச் சரக போலீஸ் கூடுதல் எஸ்.பி. ஆர்.எஸ்.கவுதம், ஆனந்த பவன் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகளுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பாலிகா சுரக்ஸா ஜாகுருகடா அபியான் என்ற பெயரில் அந்த நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, மாணவிகளிடம் பேசிய எஸ்.பி. கவுதம், " மாணவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் தங்களுக்கு ஏதேனும் தவறாக நடப்பதாக தெரிந்தால், உடனடியாக போலீஸாரின் இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் " எனப் பேசினார்.
அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு மாணவி எழுந்து எழுப்பிய கேள்வியைக் கேட்டு எஸ்.பி. கவுதம் பதில் அளிக்க முடியாமல் திணறினார்.
அந்த மாணவி பேசுகையில், " நாங்கள் யாருக்கு எதிராக புகார் அளித்தோமோ அவர்களுக்கு நாங்கள்தான் புகார் அளித்தோம் எனத் தெரியவந்தால், நாங்களும் உன்னவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் போன்றுதான் கதி ஏற்படுமா?, நாங்களும் விபத்தைச் சந்தித்தால் என்னாகும்? நாங்கள் நீதி பெறுவதற்காக போராட்டம் நடத்த வேண்டுமா?
ஏனென்றால், ஒரு எம்எல்ஏ உன்னாவில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த பின், அந்த பெண் நீதி பெறுவதற்காக சட்டப் போராட்டம் நடத்துகிறார், இப்போது விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடுகிறார்" எனக் கேட்டார்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத எஸ்.பி. கவுதம் பதில் அளிக்க முடியாமல் திணறி பேசுகையில், " உங்களின் அனைத்துப் புகார்களையும் போலீஸார் அளித்த இலவச புகார் எண்ணில் பதிவு செய்யுங்கள், உங்களுக்கு உதவுகிறோம் " என்று சமாளித்தார்.
பிடிஐ