தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு: டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்; மருத்துவ பணிகள் பாதிப்பு

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு: டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்; மருத்துவ பணிகள் பாதிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லியில் மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

63 ஆண்டுகளாக இருக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவக் ஆணைய மசோதாவை-(2019) மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த மசோதா மருத்துவத் துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை முன்வைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. 

ஆனால், இந்த மசோதா மக்களுக்கும், மாணவர்களுக்கும் எதிரானது. தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் மசோதா என்று மருத்துவர்கள், மாணவர்கள் அடங்கிய இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த மசோதா கடந்த 29-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இதனை தாக்கல் செய்கிறார். இந்தநிலையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எமர்ஜென்ஸி சேவை உட்பட அனைத்து சேவைகளையும் புறக்கணித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எய்ம்ஸ் மட்டுமின்றி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை உள்ளிட்ட டெல்லியில் உள்ள மற்ற அரசு மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் டெல்லியில் மருத்துவப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்லவும் திட்டமிட்டுள்ளனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in