

டெல்லி காங்கிரஸ் தலைவராக பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் யார் என்பது தீர்மானிக்கப்பட்ட பின்னர் இது நடைபெறும் எனவும் சலசலக்கப்பட்டது.
டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்த ஷீலா தீட்சித் அண்மையில் மறைந்தார். இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவராக பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில பொறுப்பாளர் பி.சி.சாக்கோ இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர், எனது அறிவுக்கு எட்டியவரை அப்படி ஒரு திட்டம் இல்லவே இல்லை. ஷீலா தீட்சித் மறைவுக்குப் பின்னர் டெல்லி காங்கிரஸ் தரப்பில் அடுத்த தலைமையைத் தேர்வு செய்வது தொடர்பாக எந்த ஓர் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் கிழக்கு அமிர்தசரஸ் தொகுதி எம்.எல்.ஏ.வான சித்து அண்மையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கும் அமரீந்தர் சிங்குக்கும் இடையே நீண்ட காலமாகவே கருத்து மோதல் நிலவும் சூழலில் சித்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையிலேயே சித்து டெல்லி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.