

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடகாவில் உள்ள மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் 36 மணி நேர தேடுதலுக்கு பிறகு கபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சட்டை இல்லாமல் இருந்த அவரது உடலை மீட்டு, வென்லாக் மருத்துவமனையில் பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகள் கிடைக்க கால தாமதம் ஏற்படும் என கூறப் படுவதால், வி.ஜி.சித்தார்த்தாவின் மரணத்துக்கு என்ன காரணம் என மங்களூரு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்டமாக, வி.ஜி.சித்தார்த்தா இறந்த தினத்தன்று உடனிருந்த ஓட்டுநர் பசவராஜ் பாட்டீலை விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:
பெங்களூருவில் காரில் ஏறிய தில் இருந்து 10 முதல் 20 பேரிடம் செல்போனில் பேசியிருப்பார். சிலருடன் கோபமாக வாக்குவாதத் தில் ஈடுபட்ட அவர், பின்னர் அனை வரிடமும் மன்னிப்பு கோரினார். சில நேரங்களில் அவரின் குரல் மிகவும் சோர்வடைந்து இருந்தது.
உல்லால் அருகே நேத்ராவதி மேம்பாலத்தை அடைந்தபோது, காபி டே நிறுவனத்துக்கு சொந்த மான இடத்தில் காரை நிறுத்துமாறு கூறினார். பின்னர், சிறிது தூரம் நடந்து கொண்டே பேசிவிட்டு வருகிறேன் எனக்கூறி சென்றார்.
இரண்டு மணிநேரத்துக்கு மேலாகியும் அவர் திரும்பாததால், செல்போனில் தொடர்பு கொண் டேன். அப்போது, அவரது செல் போன் அணைத்து வைக்கப்பட் டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள அவரது குடும்பத்தாரை தொடர்புகொண்டு தகவலை கூறினேன். செவ்வாய்க்கிழமை காலை வரை வி.ஜி.சித்தார்த்தா குறித்து தகவல் கிடைக்காததால், போலீஸில் புகார் அளித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு போலீஸார், ''பாலத்தில் இருந்து சித்தார்த்தா குதித்த நேரத்தில் எங்கு இருந்தீர்கள்? அவர் நீரில் விழுந்தது எப்படி உங்களுக்கு தெரியவில்லை? காரை ஏன் பாதி வழியில் நிறுத்துமாறு கூறினார்?'' என்பன உள்ளிட்ட கேள்விகளை பசவராஜ் பாட்டீலிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வி.ஜி.சித்தார்த் தாவின் செல்போன் அழைப்புகளின் விபரம் மூலம் கடைசியாக யாரிடம் பேசினார்? எவ்வளவு நேரம் பேசியுள்ளார் என்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். அதில், அவர் கடைசியாக மனைவி மாளவிகா உட்பட 3 பேரிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட வி.ஜி.சித்தார்த்தா அணிந்திருந்த உடையில் இருந்து பர்ஸ், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், அடையாள அட்டை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஆனால், செல்போன் மட்டும் கிடைக்காததால் போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதே போல, பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகம், வீடு மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.