

புதுடெல்லி
தென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தில் சராசரியை விடவும் கூடுதலாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குநர் மிர்துஞ்செய் மகாபத்ரா டெல்லியில் இன்று கூறியதாவது:
இந்த ஆண்டு நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் குறைவாக பெய்தது. வழக்கத்தை விடவும் 33 சதவீதம் பற்றாக்குறையாக பெய்தது. எனினும் ஜூலை மாதத்தில் சராசரியை விட கூடுதல் மழை பெய்துள்ளது.
நாடுமுழுவதும் சராசரியாக 105 சதவீதம் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. வழக்கத்தை விட இது 5 சதவீதம் கூடுதலாகும். இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக 9 சதவீத அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. அடுத்த 2 வாரங்களும் கூடுதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.