

நாடாளுமன்றம் சுமுகமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதிக்கவேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பதாக அவரை சோனியா காந்தி கண்டித்துள்ளார்.
மேலும், சசி தரூர் எப்போதுமே இதுபோன்று செயல்படுவதாகவும் சோனியா குற்றம் சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்துக்கு இடையூறு விளைவிப்பதற்கு தான் எதிரானவன் என்றும், நாடாளு மன்றம் சுமுகமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் சசி தரூர் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்தே சோனியா அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மற்றொரு காங்கிரஸ் தலைவரும் தரூர் எப்போதும் கட்சி ஒழுங்கை மீறிவருவதாக குற்றம்சாட்டியுள்ளார். லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் முறைகேட்டில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இவ்விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபடுகிறது.
இந்நிலையில்தான் தரூர் மேற் கண்டவாறு கூறியுள்ளார்.