Published : 31 Jul 2019 05:55 PM
Last Updated : 31 Jul 2019 05:55 PM

நீதித்துறை வரலாற்றில் முதல் முறை: ஊழல் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப்பதிவு :சிபிஐக்கு தலைமை நீதிபதி அனுமதி

 

புதுடெல்லி,

மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டில் ஊழல் செய்ததற்கு முகாந்திரம் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். 

நீதித்துறை வரலாற்றிலேயே உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியில் இருக்கும் ஒருவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய இருப்பது இதுதான் முதல்முறையாகும்.

அலகாபாத் உயர் நீதிபதிமன்றத்தில் நாராயன் சுக்லா லக்னோ அமர்வில் நீதிபதியாக இருந்து வருகிறார். மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை முடிந்த தேதிக்கு பின்  தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு சாதகமான உத்தரவுகளை சுக்லா பிறப்பித்தார்.

இதுதொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், உ.பி. அரசு தலைமை வழக்கறிஞர் ராகவேந்திர சிங் அப்போதைய  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ராவிடம் நீதிபதி சுக்லா  மீது புகார் அளித்தார். 

இதையடுத்து, நீதிபதி சுக்லா மீதான புகாரை விசாரிக்க,  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.அக்னிஹோத்ரி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பி.கே. ஜெய்ஸ்வால் ஆகியோர் கொண்ட அமர்வை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிமிஸ்ரா அமைத்தார்.

இந்த குழுவினர். நீதிபதி சுக்லா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தியதில், நீதிபதி சுக்லா ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரங்கள் இருப்பதை கண்டறிந்து தலைமை நீதிபதியிடம் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து நீதிபதி சுக்லாவை தாமாக பதவி விலகும்படி அல்லது ராஜினாமா செய்துவிடும்படி தலைமை நீதிபதி மிஸ்ரா கோரினார். ஆனால், அதற்கு நீதிபதி சுக்லா சம்மதிக்கவில்லை. 

இதைத் தொடர்ந்து புதிதாக உச்ச நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக கோகய் வந்தபின், தனக்கு நீதிமன்ற பணிகள் ஒதுக்கித் தருமாறு சுக்லா கடந்த ஜனவரி மாதம் கடிதம் எழுதினார். ஆனால், சுக்லாவின் கோரிக்கையை தலைமை நீதிபதி கோகய் மறுத்துவிட்டார். 

பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் கடிதம் எழுதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நீதிபதி சுக்லாவை நீக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். 

இதற்கிடையே சிபிஐ இயக்குநர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எழுதிய கடிதத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது விசாரணை நடத்த போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன, இதற்கு முன் இருந்த தலைமை நீதிபதியும் அனுமதி அளித்திருந்தார், ஆதலால் அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளார். 

கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் 1991, ஜூலை 25-ம் தேதி வீராசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது எந்த உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்வதாக இருந்தால் விசாரணை அமைப்புகள் முதலில் அதற்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளித்து அனுமதி பெற்றபின்புதான் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது. 

கடந்த 1991-ம் ஆண்டுக்கு முன்பு இதுபோல் எந்த உயர் நீதிமன்ற நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்ததில்லை. முதல்முறையாக, இப்போதுதான் பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x