‘உணவுக்கு மதம் கிடையாது’: வாடிக்கையாளர் ட்வீட்டுக்கு சொமேட்டோ நிறுவனம் பதில்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read


போபால், 

வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்ததை ரத்து செய்தமைக்கு பதில் அளித்த சொமேட்டோ நிறுவனம், உணவுக்கு மதம் கிடையாது என பதில் அளித்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த பண்டிட் அமித் சுக்லா எனும் வாடிக்கையாளர், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் பெற்று டெலிவரி செய்யும் சொமேட்டோ நிறுவனத்திடம் உணவு ஆர்டர் செய்தார். அவருக்கான உணவை ஓட்டலில் பெற்று யார் உணவைக் கொண்டு வருவார்கள் எனும் பெயரையும் அவருக்கு சொமேட்டோ நிறுவனம் பதிவிட்டது. 

இதைக் கண்ட உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளர் சொமேட்டோ நிறுவனத்தின் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டார். அதில் " நான் சொமேட்டோவில் ஆர்டர் செய்திருந்திருந்ததை ரத்து செய்கிறேன். நான் ஆர்டர் செய்திருந்த உணவை இந்து அல்லாத ஒருவர் எனக்கு டெலிவரி செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.

நான் உணவு டெலிவரி செய்பவரை மாற்றுங்கள் என்று கூறியும் அவர்கள் மாற்ற முடியாது, பணத்தையும் திரும்பத் தரமுடியாது என்று தெரிவித்துவிட்டார்கள். என்னை உணவை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம், ஆர்டரை ரத்து செய்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார். 

அதுமட்டுமல்லாமல் இந்த உரையாடலை அந்த வாடிக்கையாளர் செல்போனில் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வழக்கறிஞர் மூலம் இதைக் கொண்டு செல்வேன் எனவும், இந்து அல்லாதவர் மூலம் எடுத்துவரப்படும் உணவை விரும்பவில்லை எனவும்  சொமேட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் தெரிவித்தார்.

இதற்கு சொமேட்டோ நிறுவனம் அளித்த பதிலில், " உணவுக்கு மதம் இருப்பதில்லை. உணவே மதம்தான்" எனத் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசியக் கொடியின் படத்தைப் பதிவிட்டு, " தேசத்தை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். வேறுபட்ட தளத்தில், பல்வேறுவகையான  எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களும், பார்ட்னர்களும் இருக்கிறார்கள். இந்த வர்த்தக வாய்ப்பை இழந்ததற்காக வருத்தப்படவி்ல்லை" எனத் தெரிவி்த்தார்

கோயலின் இந்த ட்வீட்டுக்கு ரீட்விட் செய்து, முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரெய்ஷி பதிவிடுகையில் " தீபிந்தர் கோயலுக்கு சல்யூட். இந்தியாவின் உண்மையான முகம் நீங்கள்தான். உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் யாதவ் 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in