

பெட்டியா (பிஹார்)
பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ் அப் குழு தொடங்கி இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்ட பிஹார் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மேற்கு சம்பரன் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஜெயந்த் காந்த் தெரிவித்ததாவது:
“நாஸ்னி சவுக் பகுதியியிலிருந்து 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்று செயல்பட்டு வந்தது. 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' குறித்து நகரக் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி ஸ்ரீராம் சிங்கிடம் உள்ளூரைச் சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இந்த வாட்ஸ் அப் குழு நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்படுவதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' வாட்ஸ் அப் குழு இந்தியாவுக்கு விரோதமான கருத்துகளை வலைதளங்களில் பரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு அட்மினாக செயல்பட்டு வந்த சத்தாம் குராஷி (22) என்பவர் பெட்டியா நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார். அவர் தகவல்கள் அனுப்பி வந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உடைக்க சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். குராஷிக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது”.
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
-பிடிஐ