

ஸ்ரீநகர்
முத்தலாக் சட்டம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில் வாக்கெடுப்பில் 2 மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பங்கேற்காதது குறித்து ஓமர் அப்துல்லா, மெஹபூபா முப்திக்கு காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா கடந்த 25-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு மசோதா சட்டமாகும்.
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மெஹபூபா முப்தி அவர்களே! முத்தலாக் சட்டம் வாக்கெடுப்ப நடந்தபோது உங்கள் கட்சி எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என்பதை உறுதி செய்து விட்டீர்களா? வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதும் ஒருவகையில் சட்டம் நிறைவேற ஆதரவளிப்பது தான். இதன் மூலம் நீங்கள் அரசுக்கு உதவி செய்துள்ளீர்கள். சட்டம் நிறைவேற உதவி செய்துள்ளீர்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு மெஹபூபா முப்தி கடும் காட்டமாகப் பதிலளித்துள்ளார். ‘‘முத்தலாக் சட்டம் என்பது நிறைவேற்றப்பட வேண்டிய தேவையே இல்லை. இதனை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. காலவிரயம் தேவையில்லை. எத்தனையோ முக்கிய பணிகள் பல உள்ளன’’ எனக் கூறியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக உங்கள் கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதே ஞாபகம் மறந்துவிட்டதா’’ எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஓமர் அப்துல்லா ‘‘வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பதும் கூட சட்டம் நிறைவேற உதவி செய்வது தானே. இதுவும் பாஜகவுக்கு உதவி செய்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.