எட்டு வழிச்சாலை வழக்கு: எதிர்மனுதாரர்களை ஏன் சேர்க்கவில்லை?- மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி: வழக்கு ஆக.7-க்கு ஒத்திவைப்பு

எட்டு வழிச்சாலை வழக்கு: எதிர்மனுதாரர்களை ஏன் சேர்க்கவில்லை?- மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி: வழக்கு ஆக.7-க்கு ஒத்திவைப்பு
Updated on
2 min read

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் எதிர்மனுதாரர்களை வழக்கில் சேர்க்க உத்தரவிட்டும், மேலும் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கை ஒத்தி வைத்தது. 

சென்னை -சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து திட்ட மேலாண்மை இயக்குனர்  கடந்த மே இறுதி வாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரமணா, சந்தான கவுடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய 3 பேர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

தமிழக அரசின் நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நிறைய தவறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது என்று கூறிய உச்ச நீதிமன்றம், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே நிலத்தை நிறைய பேரிடம் இருந்து வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. திட்டத்திற்கான அனுமதி கிடைக்கப் பெறுவதற்கு முன்பே எப்படி நிலத்தை வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியது.

சாலை திட்டத்திற்கு நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நிறைய தவறுகள் நிகழ்ந்து இருப்பதைப் பார்க்க முடிகிறது, சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய விஷயமாக இல்லை. விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. இதற்கு பதிலளிக்க எதிர்மனு தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுவதாகக் கூறி  வழக்கை ஒத்தி வைத்தனர். 

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை என்.வி.ரமணா தலைமையிலான 3 பேர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன, மக்கள் அது தொடர்பாக என்ன கருத்து கூறியுள்ளனர் என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பல விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர், அவர்கள் அனைவரது மனுக்களையும் உச்ச நீதிமன்றம் கேட்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அனைவரின் பெட்டிஷனையும் கேட்க வேண்டும் எனக் கூறினால், இந்த வழக்கு எப்படி அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஏற்கெனவே கடந்த முறையே  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த அனைவரையும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்க மத்திய அரசுக்கு  உத்தரவிட்டோம். ஆனால் அதை நீங்கள் சேர்க்கவில்லை . எனவே அனைவரையும் எதிர்மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மீண்டும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில்,  “புதிதாக நிலத்தைக் கையகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை என அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே இந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரி சேலத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்ய புதிய மனுவுக்கும்  மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட  நீதிபதிகள் அமர்வு, இந்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக ஆகஸ்ட் 7-ம் தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in